திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றுமுன்தினம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ₹1,000 ரொக்கம் ஆகியவற்றை வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் திருப்பத்தூர் மாவட்டம் கற்பகம் வேலூர் மாவட்ட மொத்த விற்பனை பண்டகசாலை கட்டுப்பாட்டில் இயங்கிவரும் திருப்பத்தூர் நியாய விலைக்கடை எண்.1ல் அரிசி குடும்ப அட்டைதாரார்களுக்கு 2023ம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா நேற்று பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார். தொடர்ந்து,
ஒருகுடும்ப அட்டைதாரருக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.
பின்னர் அவர் கூறுகையில், நியாய விலை கடைக்கு பொங்கல் பரிசு பெற வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கொடுக்க வேண்டும். சர்க்கரை, பணம் உள்ளிட்டவைகள் கொடுக்காமல் ஏமாற்றினால் உரிய அதிகாரிகள் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு 3லட்சத்து 30ஆயிரத்து 744 குடும்ப அட்டைதார்களுக்கு ₹46.02 டன் அரிசி, சர்க்கரை மற்றும் ₹1000 வழங்கிட மற்றும் முழுகரும்பு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து வழங்க ₹1.09 கோடி என மொத்தம் ₹47.11 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
நமது மாவட்டத்தில் இதுவரை 1.90 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் இப்பொங்கல் பரிசு தொகுப்புகளை பெற்றுக்கொண்டு தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும்’ என்றார்.ஆய்வின் போது கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் முருகேசன், கூட்டுறவுத்துறை பணியாளர்கள், நியாய விலைக்கடை விற்பனையாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.