தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் இன்று நடிகர் அஜித், விஜய் நடித்த துணிவு, வாரிசு திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. பல வருடங்களுக்குப் பிறகு இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது. அதேவேளையில், பல்வேறு இடங்களிலும் இரு நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதையும் காணமுடிந்தது.
அந்த வகையில் சென்னை, ரோகிணி திரையரங்கில் இன்று நள்ளிரவு 1 மணிக்கு அஜித் நடித்த துணிவு திரைப்படமும், அதிகாலை 4 மணிக்கு விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் திரையிடப்பட்டன. அப்போது இரு நடிகர்களின் ரசிகர்களும் ஒரே திரையரங்கில் கூடியிருந்தனர். எந்தவித அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை ஏற்பாடாக காவல்துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அதேவேளையில், திரையரங்கம் சார்பில் பவுன்சர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஹீரோக்களின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யக்கூடாது என்று அரசு தரப்பில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், ரசிகர்கள் இரவு முதலே திரையரங்கிலிருந்த கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்தும், கத்தி கூச்சலிட்டுக் கொண்டும் இருந்தனர்
இந்த நிலையில்தான், ரோகிணி திரையரங்கிலிருந்த அஜித் ரசிகர்கள், அந்த வழியாக வந்த லாரியில் ஏறி நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது, லாரியில் நடனமாடிக்கொண்டிருந்த சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பரத்குமார் (19) என்ற இளைஞர் லாரியிலிருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். அதில், அவருக்கு முதுகுத்தண்டில் பலமாக அடிபட்டு எழுந்திருக்க முடியாமல், வலியில் துடித்துக் கொண்டிருந்தார்.
இதனைக் கண்ட ரசிகர்கள் அவரை உடனடியாக மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தனர். இருந்தபோதிலும், இளைஞர் பரத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கோயம்பேடு பகுதி போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், ரோகிணி திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த நடிகர் விஜய்யின் வாரிசு பட பேனர்களும் கிழிக்கப்பட்டன.
இதனால், விஜய் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். மேலும், துணிவு படம் பார்க்க உள்ளே செல்லும்போது, ரசிகர்கள் முந்திக்கொண்டு சென்றதால் திரையரங்க கண்ணாடி உடைந்தது. உயிர்ப்பலி, பேனர் கிழிப்பு, கண்ணாடி உடைப்பு என பல்வேறு காரணங்களால் திரையரங்க வளாகம் பரபரப்பாகக் காணப்பட்டது.