புதுடில்லி, அ.தி.மு.க., தலைமை தொடர்பான வழக்கில், ‘பொதுக் குழுவே கட்சியின் உயர்மட்ட அமைப்பாகும். அதில் எடுக்கப்படும் முடிவு கட்சியில் உள்ள அனைவரையும் கட்டுப்படுத்தும்’ என, முன்னாள் முதல்வர் பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
அ.தி.மு.க., தலைமை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வில்இந்த வழக்கின் விசாரணை நேற்றும் தொடர்ந்தது.
அப்போது, முன்னாள் முதல்வர் பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம் வாதிட்டதாவது:
கடந்த ௨௦௧௭ம் ஆண்டு வரை பொதுச் செயலர் பதவியே கட்சியில் உச்சபட்ச பதவியாக இருந்தது.
கடந்த, ௨௦௧௭ல் கட்சியின் சட்ட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு, பொதுச் செயலர் பதவிக்கு பதிலாக, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.
கடந்த ௨௦௨௧ல், இந்த இரு பதவிக்கான தேர்தலை ஒரே ஓட்டுச் சீட்டில் நடத்துவது என்ற விதி மட்டும் மாற்றப்பட்டது. மற்றபடி கட்சியின் சட்ட விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
கட்சியில் பொதுக் குழு என்பதே உயர்மட்ட அமைப்பாகும். அதில் எடுக்கப்படும் முடிவுகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரையும் கட்டுப்படுத்தும்.
கடந்த, ௨௦௧௭ல் பொதுச் செயலர் பதவியில் யாரும் இல்லாத நிலையில், பொதுக் குழு உறுப்பினர்கள் இணைந்து பொதுக் குழு கூட்டம் நடத்தப்பட்டது.
அதனால், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக் குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.
கட்சி விவகாரத்தில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. இதனால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
இதையடுத்து, ஒற்றைத் தலைமை குறித்து பொதுக் குழுவில் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
முன்னதாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், தன் வாதங்களை நிறைவு செய்தார்.
வழக்கின் விசாரணை இன்றும் தொடர்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்