டெல்லி: ஜனநாயக அடிப்படையில் பலம் பொருந்திய ஒரு எதிர்க்கட்சியை செயல்படவிடாமல் தடுப்பதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதம் செய்தார். கட்சியில் என் ஆதரவும் இல்லாத ஒருவர் பொதுக்குழு கூட்டத்தையும், அதன் முடிவையும் எதிர்ப்பது அடிப்படையற்றது என தெரிவிக்கப்பட்டது.
பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம்: எடப்பாடி தரப்பு வாதம்
அதிமுக கட்சியில் உச்சபட்ச அதிகாரத்தை பொதுக்குழு கொண்டுள்ளது. எதிர்க்கட்சியாக செயல்பட முடியாமல் முட்டுக்கட்டை நிலவுவதை கருத்தில் கொள்ள வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டியது இல்லை என வாதிடப்பட்டது.
இரட்டை தலைமை: நீதிபதிகள் கேள்வி
அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனரா எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர் என எடப்பாடி தரப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஓபிஎஸ் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது: எடப்பாடி தரப்பு
ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் கட்சியின் விதிப்படி நடைபெற்றதாக எடப்பாடி தரப்பு சார்பில் வாதிடப்பட்டது. ஓபிஎஸ் தனக்குத்தான் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என கூறுவது உண்மை அல்ல. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கிய பொதுக்குழுவே, அவற்றை ரத்து செய்துள்ளது. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதால், ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டாரே தவிர, 1.5 கோடி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. அருமையான வாதம் என நகைச்சுவையாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
பொதுக்குழுவுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்தார் ஓபிஎஸ்:
கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு எதிராக ஓபிஎஸ் காவல் துறையில் புகார் அளித்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு தொடரவில்லை என எடப்பாடி பழனிசாமி சார்பில் வாதிடப்பட்டது.
ஓபிஎஸ் எவ்வாறு நீக்கப்பட்டார்?: நீதிபதிகள் கேள்வி
பொதுக்குழு கூட்டத்தில் இடம்பெறாத நிகழ்ச்சி நிரலை கொண்டு ஓபிஎஸ் எவ்வாறு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அவை தலைவருக்கு அதிகாரம் உள்ளது: அவைத்தலைவர் தரப்பில் வாதம்
கட்சியின் செயற்குழுவையும், பொதுக்குழுவையும் நடத்த அவை தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்று அவைத்தலைவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பேரவை தலைவருக்கு இணையான அதிகாரம் அவை தலைவருக்கு கட்சி விதிகளில் வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் உச்சபட்ச அதிகாரத்தை பொதுக்குழு கொண்டுள்ளதாக கட்சியின் விதி தெரிவிக்கிறது எனவும் வாதிடப்பட்டது.
பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம்: அவை தலைவர் தரப்பில் வாதம்
அதிமுக விதி எண் 43ன் படி, கட்சி விதிகளை நீக்கவோ, மாற்றவோ, திருத்தவோ பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. அதிமுக விதி 5ன் படி உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பு பொதுக்குழுவாகும். ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் பொதுக்குழுவுக்கு கட்டுப்பட்டவர்கள். ஜூன் 23ம் தேதி அவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவைத்தலைவரின் அறிவிப்பை தொடர்ந்து ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஜூன் 23, ஜூலை 11ம் தேதிகளில் நடைபெற்ற பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள் அனைத்தும் நேரலை செய்யப்பட்டன. பொதுக்குழு உறுப்பினர்களில் 82 சதவீதம் பேர் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என தெரிவித்தனர் என்று அவை தலைவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதிமுக அலுவலகத்தை ஓபிஎஸ் சூறையாடினார்:
அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என கூறும் ஓபிஎஸ், கட்சியின் தலைமை அலுவலகத்தை எப்படி சூறையாட முடியும்? என அவை தலைவர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அடிப்படை உறுப்பினர்கள் ஆதரவு ஓபிஎஸ்க்கு இல்லை: அவை தலைவர் தரப்பில் வாதம்
அதிமுக அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு ஓபிஎஸ் தரப்புக்கு இல்லை. ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் வழக்கு தொடரவில்லை என அவை தலைவர் தரப்பில் வாதிடப்பட்டது.
ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் ஏன்?: அவை தலைவர் தரப்பில் விளக்கம்
ஜூன் 23 பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்க முடியாததால், ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டது. ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு முன்வைத்த வாதங்களை ஏற்க முடியாது என அவை தலைவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை உணவு இடைவேளைக்காக ஒத்திவைக்கப்பட்டது. உணவு இடைவேளைக்கு பின் விசாரணை தொடரும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர். அவை தலைவர் தரப்பில் வாதம் நிறைவடைந்த நிலையில், உணவு இடைவேளைக்கு பின் செயற்குழு தரப்பில் வாதம் முன்வைக்கப்படுகிறது.