தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களில் ஒன்று குமரி கடல். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடலில் சூரியன் உதயமாகும் அழகையும், கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை உள்ளிட்டவற்றை படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே கண்ணாடி கூண்டுபாலம் அமைப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
அந்த உத்தரவின் படி, ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியின் டெண்டரை சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்று எடுத்துள்ளது. இந்தப் பாலம் 97 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது.
இதன் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் போது பாலத்தின் வழியாக கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக வெளிநாடுகளில் அமைக்கப்பட்டுள்ளது போன்று அமைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை பாலத்திற்கான முதற்கட்ட ஆய்வு பணி தொடங்கி, விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட இரண்டு பாறைகளின் மாதிரிகளை சேகரித்து சென்னை ஐ.ஐ.டி. க்கு அனுப்பி பாறைகளின் தன்மையை ஆய்வு செய்யும் பணி தொடங்கியது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது, “ஆய்வுகளின் முடிவுகள் வந்த பிறகு பாலத்திற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும். மேலும் ஒரு வருடத்திற்குள் பாலதிற்கான கட்டுமான பணிகள் நிறைவடையும்” என்று தெரிவித்துள்ளனர்.