வாரிசு விமர்சனம்: டான்ஸ், ஃபைட், எமோஷன் எல்லாம் இருக்கு… ஆனால், ஆட்டநாயகனாகிறாரா விஜய்?!

பல ஆயிரம் கோடி வருமானம் ஈட்டும் ஒரு பெரும் நிறுவனத்தின் தலைவர் சரத்குமார். அவருக்கு மூன்று மகன்கள். கருத்து வேறுபாட்டால் குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ்கிறார் கடைக்குட்டி விஜய். கடும் உழைப்பால் சரத்குமார் உருவாக்கிய சாம்ராஜ்யத்தின் அடுத்த வாரிசாக முடிசூட்டப்போவது யார், இந்தப் போட்டியால் உடைந்துகிடக்கும் குடும்பம் என்னவெல்லாம் ஆனது, பிசினஸ் எதிரியான பிரகாஷ்ராஜ் என்னவெல்லாம் செய்தார் என்பதுதான் `வாரிசு’ படத்தின் ஒன்லைன்.

உண்மையில் ஆட்டநாயகனாக மொத்த படத்தையும் தன் தோளில் சுமப்பது விஜய்தான். நக்கலான உடல்மொழி, துரு துரு பேச்சு என வின்டேஜ் விஜய்யாகத் திரையில் ‘கில்லி’யாக நிறைகிறார். எதிரிகளிடம் குறும்புத்தனம் செய்வது, அம்மாவிடம் பாசத்தில் ததும்புவது, யோகி பாபுவுடன் டைமிங்கில் கவுன்ட்டர் அடிப்பது என ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு கல கல அவதாரத்தில் கலக்கியிருக்கிறார். இந்த துரு துரு உடல்மொழி சில இடங்களில் ஓவர்டோஸானாலும் பெரும்பாலான இடங்களில் ரசிக்கவே வைக்கிறது. குறிப்பாக இறுதிக்காட்சிகளில் பிரகாஷ்ராஜ் இடத்துக்குச் சென்று அவர் செய்யும் சேட்டை அதகளம். நடனத்திலும் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். ‘ரஞ்சிதமே’ பாடலில் அவர் ஆடியிருக்கும் அந்த சிங்கிள் ஷாட் நடனம் அவரது ரீசன்ட் பெஸ்ட்.

வாரிசு விமர்சனம்

‘பிசினஸ் ஃபர்ஸ்ட், பேமிலி நெக்ஸ்ட்’ எனப் பரபரப்பாக இருக்கும் டெரர் தொழிலதிபராக சரத்குமார். தோற்றத்தில் கதாபாத்திரத்திற்கான மிடுக்கு இருந்தாலும் முகபாவனைகளில் அது சுத்தமாக மிஸ்ஸிங். பிரகாஷ்ராஜுக்கு என்றே அளவெடுத்துச் செய்த வில்லன் கதாபாத்திரம். ஆனால், அவரும் பெரிய தாக்கத்தை விட்டுச்செல்லவில்லை. விஜய்யின் இரண்டு அண்ணன்களில் ஶ்ரீகாந்த்தின் கதாபாத்திரம் சற்றே முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருக்கிறது. அவரும், மற்றொரு மகனாக வரும் ஷ்யாமும் சிறப்பாகவே நடித்திருக்கின்றனர்.

குடும்பத்தில் அனைவரையும் இணைக்கும் புள்ளியாக அம்மா கதாபாத்திரத்தில் ஜெயசுதா. படத்திற்குக் கனம் சேர்ப்பது இவருக்கும் விஜய்க்கும் இடையேயான காட்சிகள்தான். பாடல்கள் தவிர்த்து ராஷ்மிகாவுக்குப் படத்தில் பெரிய வேலை இல்லை. இவர்கள் இல்லாமல் சங்கீதா, கணேஷ் வெங்கட்ராம், சம்யுக்தா ஷான், விடிவி கணேஷ், ஸ்ரீமன் எனப் பெரிய நடிகர் பட்டாளமே ஆங்காங்கே தோன்றி மறைகிறது. நட்புக்காக வரும் எஸ்.ஜே.சூர்யாவின் போர்ஷன் ஸ்வீட் சர்ப்ரைஸ்.

வழக்கமான டெம்ப்ளேட்தான். அதில் பிசினஸ் மோதல், வாரிசுக்கான போட்டி என எக்ஸ்ட்ராவாக இரண்டு வரிகள் சேர்த்து ‘குடும்பங்களுக்கான’ பொழுதுபோக்கு படத்தைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் வம்சி பைடிபல்லி. ஆனால், கதாபாத்திரங்களில் போதிய அழுத்தம் இல்லாததால் எமோஷனல் டிராமா வெறும் டிராமாவாக சுருங்கி நிற்கிறது. திரைக்கதையும் எங்குமே டேக் டைவர்ஷன் போடாமல் எளிதில் யூகித்துவிடக் கூடிய வகையில் நாம் பார்த்துப் பழகிய பாதையிலேயே பயணிப்பது அலுப்பைத் தருகிறது.

வாரிசு விமர்சனம்

குடும்பம், நிறுவனம், வாரிசுக்கான போட்டி என அனைத்தையும் நிறுவ முழு முதற்பாதியை எடுத்துக்கொள்கிறார் இயக்குநர் வம்சி. அதனாலேயே பெரிய ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் அவ்வப்போது பாடல்கள், கொஞ்சம் கதை என நம்மைச் சோதிக்கிறது திரைக்கதை. சரி, இரண்டாம் பாதியில் ஆக்ஷன் பிளாக் என நாம் நிமிர்ந்து உட்கார்ந்தால், அதிலும் விஜய்யின் நடிப்பைத் தவிரப் புதிதாகச் சொல்ல எதுவுமில்லை.

படத்தில் நாம் யாரும் எதிர்பார்க்காத இன்னொரு ஏரியாவிலும் கோட்டைவிட்டிருக்கிறது ‘வாரிசு’ டீம். அது VFX. இது க்ரீன் ஸ்க்ரீனில் எடுக்கப்பட்ட காட்சிதான் என அப்பட்டமாகத் தெரியும் அளவுக்குச் செயற்கையாக இருக்கின்றன சில காட்சிகள். பணக்காரர்கள் வாழும் பிரமாண்டமான வீடு என்பதெல்லாம் ஓகேதான். ஆனால், உள்ளே வரும் வெளிச்சம், வெளியில் தெரியும் விஷயங்கள் என அத்தனையும் செயற்கையாகவே இருக்கின்றன. இதுபோன்ற பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய ஹீரோக்களின் படங்களிலேயே இப்படி மேக்கிங்கில் சொதப்பினால் எப்படி பாஸ்?!

இரண்டு நிறுவனங்களுக்கான பிசினஸ் போட்டி என்று பரபரப்பாக ஆரம்பித்துவிட்டு, கடைசி வரை டெண்டர் எடுப்பதற்கான சண்டை மட்டுமே போட்டுக்கொண்டிருக்கிறார்கள். மைனிங் என்றாலும் என்ன தொழில் செய்கிறார்கள், ஸ்டார்ட் அப் தொடங்க நினைக்கும் விஜய் எப்படி பாஸுக்கு எல்லாம் பாஸ் ஆனார் என நிறையக் கேள்விகளும் லாஜிக் பிழைகளும் எட்டிப் பார்க்கின்றன.

வாரிசு விமர்சனம்

மாஸ் காட்சிகளில் தெறிக்கிறது தமனின் இசை. பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்குப் பெரும்பலம். வழக்கமான வசனங்களாக இல்லாமல் வேறு ஒரு மீட்டரில் விஜய்க்கென மாஸ் வசனங்கள் எழுதிக் கவனிக்கவைக்கிறார் விவேக்.

டான்ஸ், ஆக்ஷன், எமோஷன், காமெடி என எல்லாமே இருந்தும் பத்து வருடங்களுக்குப் பிந்தைய டெம்ப்ளேட் கதையால் சறுக்கியிருக்கிறது படம். தேர்ந்த நடிப்பை வழங்கி ஆட்டநாயகனாக நிற்கும் விஜய்க்கு இணையாக, இயக்குநர் தொடங்கி யாருமே சரியான பார்ட்னர்ஷிப்பைக் கொடுக்காததால் இந்த `வாரிசு’ ஆட்டத்தில் எங்குமே அனல் பறக்கவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.