3,949 காலியிடங்கள்.. கொரோனா கால செவிலியர்களுக்கு முன்னுரிமை; அமைச்சர் தகவல்..!

மாவட்ட சுகாதார மையம் மூலம் 3,949 செவிலியர்கள் காலி பணியிடங்களை 38 மாவட்ட ஆட்சியர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக நிரப்ப உள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மாவட்ட சுகாதார மையம் மூலம் 3,949 செவிலியர்கள் காலி பணியிடங்களை 38 மாவட்ட ஆட்சியர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக நிரப்ப உள்ளனர். இதில், கொரோனா காலகட்டத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 100 மதிப்பெண்களில் நடத்தப்படும் இந்த தேர்வில் 40 மதிப்பெண் பெற்றுவிட்டால் பணி கிடைத்து விடும்.

அந்த வகையில், கொரோனா காலத்தில் 20 மாதம் பணியாற்றியிருந்தால் மாதத்திற்கு இரண்டு மதிப்பெண்கள் வீதம் 40 மதிப்பெண்கள் செவிலியர்களுக்கு வழங்கப்படுகிறது. அதை போல், ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்ட 800 செவிலியர்களும் இந்த தேர்வில் பங்கேற்றுக் கொள்ளலாம். இதற்கு முன்பாக செவிலியராக பணிபுரிந்தவர்களுக்கு மாதம் ரூ.14,000 ஊதியம் வழங்கப்பட்டது. தற்போது இந்த பணியில் சேர்ந்தால் ரூ.18,000 மாத ஊதியம் வழங்கப்படும்.

மேலும், செவிலியர்கள் சொந்த மாவட்டத்திலேயே பணியாற்றிக் கொள்ளலாம். இந்த வாய்ப்பினை செவிலியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல் அரசு மருத்துவமனைகளில் கொரோனா காலகட்டத்திற்கு முன்பாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்களில் சுமார் 500 பேர் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.