புதுடெல்லி: “உலகின் பெரும்பாலன சவால்களை தெற்கு பிராந்திய நாடுகள் உருவாக்கவில்லை. ஆனால் அதன் பாதிப்பை அதிகமாக அந்நாடுகளே சந்திக்கின்றன” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தியா நடத்துகின்ற “வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் உச்சி மாநாட்டின்” தொடக்க நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,” நாம் அனைவரும் மீண்டும் போர், சவால்கள், தீவிரவாதம் மற்றும் புவியியல் பதற்றம், உணவு, உரம், எரிபொருள் விலை உயர்வு போன்ற பெரும் சவால்கள் நிறைந்த ஒரு கடினமான ஆண்டை கடந்து வந்திருக்கிறோம். உலகம் சந்திக்கும் பெரும்பாலன சாவல்கள் தெற்குபகுதி நாடுகளால் உருவாக்கப்படுவதில்லை. ஆனால் அதன் பாதிப்புகளை தெற்கு நாடுகள் தான் அதிகம் சந்திக்கின்றன. எதிர்காலத்தில் தெற்கு நாடுகளாகிய நாம் தான் உலகில் அதிக பங்களிப்பைத் தரப்போகிறோம். உலக மக்களில் நான்கில் மூன்று பங்கினர் நம் நாடுகளில் வாழ்கின்றனர். இந்தியா தனது வளர்ச்சியின் அனுபவங்களை எப்போதுமே தெற்கு நாடுகளுடன் பகிந்து வந்துள்ளது. நமது கூட்டுவளர்ச்சி அனைத்து புவியியல் மற்றும் பல்வேறு துறைகளை உள்ளடக்கியது.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து, பதிலளிப்பது, அங்கீகரிப்பது, மதிப்பளிப்பது குறித்த ஒரு உலகளாவிய கொள்கைக்கு அழைப்பு விடுக்க வேண்டும். வளரும் நாடுகள் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றன. இருந்தபோதிலும் நமக்கான காலம் வரும் என்று நான் நம்புகிறேன். எளிமையாக அளவிடக்கூடிய நிலையான தீர்வினை உருவாக்குவதே காலத்தின் தற்போதைய தேவை.
அந்நியர்களின் ஆட்சிக்கு எதிரான போரில் நாம் ஒருவருக்கொருவர் உதவி இருக்கிறோம். புதியதொரு உலகை உருவாக்க, நாம் நாட்டு மக்களின் வளத்தினை உறுதி செய்ய இந்த நூற்றாண்டில் நாம் அதை மீண்டும் செய்வோம். உங்களுடைய குரல் இந்தியாவின் குரல், உங்களுக்கான முன்னுரிமை இந்தியாவின் முன்னுரிமை” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இந்தியா “வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் உச்சி மாநாட்டு” என்ற இரண்டு நாள் மாநாட்டினை நடத்துகிறது. முதல்நாள் மாநாடு இன்று (ஜன.12) தொடங்கியது. முதல் நாளில் தலைவர்கள் பங்கேற்கும் அமர்வுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.
வாய்ஸ் ஆஃப் யுனிட்டி, வாய்ஸ் ஆஃப் பர்பஸ் என்ற கருப்பொருளில் நடக்கும் இந்த உச்சிமாநாடு உலகின் தெற்குபகுதியில் இருக்கும் நாடுகள் ஒன்றிணைந்து, உலகளாவிய பிரச்சினைகளில் தங்களின் பார்வைகள் மற்றும் முன்னுரிமைகள் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வழிவகுக்கும். இந்த மாநாட்டில் பங்கேற் 120க்கும் அதிகமான நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.