தமிழக விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், தான் அமைச்சர் பொறுப்பை ஏற்றபிறகு முதன்முறையாக சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார். திருப்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா ? என திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டு விழாவான, கபடி சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி ஜூன் மாதம் நடத்தி முடிக்கப்படும் எனக் கூறினார்.
உலக கோப்பை கபடி போட்டி தமிழகத்தில் நடத்துவது குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசிக்கப்படும் எனவும் கூறினார். திருப்பூரில் அரசு கலைக்கல்லூரியில் 8 ஏக்கர் நிலத்தில் 18 கோடி ரூபாய் செலவில் புதிய மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருவதாகவும், அங்கு திறந்த வெளி விளையாட்டு அரங்கங்கள், உடற்பயிற்சி கூடங்கள் ,400 மீட்டர் தடகளம், டென்னிஸ் கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கன மைதானங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், திருப்பூர் திறந்தவெளி விளையாட்டு திடலுக்கான பணி 60 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும், 2023 ஏப்ரல் மாதத்திற்குள் 1500 பார்வையாளர்கள் அமரும் வகையில் அரங்கம் உள்ளிட்ட பணிகள் நிறைவடையும் எனத் தெரிவித்தார்.