சென்னை: தமிழக ஆளுநர் ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள், இன்று (12/01/23) மாலை பொங்கல் பண்டிகை விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளார். அவர் குடியிருக்கு, தமிழக ஆளுநர் மாளிகையில் இன்று தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதிலும் இருந்து கிராமிய கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அவர்களுக்கு பரிவட்டம் கட்டி, அவர் மேளதாளத்துடன் விழா அரங்குக்கு அழைத்து வரப்படுவதாக திட்டமிடப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் பணி புரியும் ஊழியர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியில், ஆளுநர் தனது மனைவியுடன் கலந்துக் கொள்கிறார்.
இந்த பொங்கல் விழாவில், நட்சத்திர ஓட்டல் உணவு பதார்த்தங்கள் தவிர்க்கபட்டு, 22 வகையான பாரம்பரிய உணவுகள் தயாரித்து இரவு விருந்து நடைபெறும். பாரம்பரிய தமிழக உணவுகளை பார்வையிடும், ஆளுநர் ரவியும் அவரது மனைவியும் சமையல் கலைஞர்களுடன் உரையாடுவார்கள் என ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய பொங்கல் சிறப்பு விழாவில், இசை மற்றும் கிராமிய கலைஞர்களின் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகம், பள்ளி மாணவ மாணவியரின் சிலம்பாட்டம், வாள்வீச்சு, வேல்வீச்சு என வீரக்கலைகள் நடத்தப்படும். விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ள பார்வையாளர்களுடன், ஆளுநர் ரவியும் நிகழ்ச்சிகளை கண்டு களிப்பார்.
இந்த சிறப்பு பொங்கல் விழாவில் கலந்துக் கொள்வதற்காக, முக்கிய பிரமுகர்கள், நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள், அனைத்து மத பிரதிநிதிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் சிறப்பு விழாவின் முடிவில் கலைஞர்களுக்கு சிறப்பு செய்யும் ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழில் நன்றியுரை ஆற்றுவார் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 வகையான பாரம்பரிய உணவுகளுடன் இரவு விருந்துடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.
தமிழகத்தில் தற்போது, ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த ஆளுநரின் பொங்கல் வாழ்த்தில் மத்திய அரசின் இலச்சினை இடம்பெற்றுள்ளது, தமிழ்நாடு அரசின் இலச்சினை இடம்பெறவில்லை. கடந்தாண்டு வெளிவந்த ஆளுநர் ஆர்.என். ரவியின் பொங்கல் வாழ்த்தில் தமிழ்நாட்டின் இலச்சினை இடம்பெற்றிருந்தது நினைவுக்கூரத்தக்கது.