ஆந்திராவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ள வந்தே பாரத் ரயில்மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு டெல்லி – வாரணாசி இடையே இயங்கும் முதல் வந்தே பாரத் ரயில் திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதையடுத்து காந்தி நகர் – மும்பை, சென்னை – மைசூர் இடையே என இதுவரை 5 வழித்தடங்களில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வந்தே பாரத் ரயில்கள் தொடர்ச்சியாகக் கால்நடைகள் மோதி விபத்துக்குள்ளாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 6 மாதத்தில் மட்டும் வந்தே பாரத் ரயில் 68 முறை கால்நடைகள் மீது மோதி சேதமடைந்துள்ளதாக நாடாளுமன்ற கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில் வந்தே பாரத் ரயில்கள்மீது கற்கள் வீசப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேற்குவங்கத்தில் வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசி தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஆந்திராவிலும் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத்திற்கு வந்தே பாரத் ரயில் சேவையை ஜனவரி 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் ரயில்வேதுறை அதுதொடர்பாக ஒத்திகை செய்து பார்த்தது.
அப்போது விசாகப்பட்டினம் ககாஞ்சரப்பாலம் அருகே வந்த போது வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ரயில் ஜன்னல் கண்ணாடி சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in