பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தமிழர்களால் ஜனவரி மாதம் 14ஆம் தேதி கோலகலமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பாகவும், சிரமம் இன்றியும் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், நடப்பாண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. தாம்பரம் – திருநெல்வேலி இடையே இரண்டு சிறப்பு ரயில்களும், தாம்பரம் – நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரம் கொச்சுவேலி – தாம்பரம் இடையே தலா ஒரு சிறப்பு ரயிலும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு நாளை தொடங்கவுள்ளது.
சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரு கூடுதல் பொங்கல் சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் – திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் (06049) ஜனவரி 14ஆம் தேதியன்று தாம்பரத்திலிருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.
அதேபோல், மறு மார்க்கத்தில் திருநெல்வேலி – தாம்பரம் அதி விரைவு சிறப்பு ரயில் (06050) திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 18 ஆம் தேதியன்று மாலை 05.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 13 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு ஜனவரி 13ஆம் தேதி (நாளை) காலை 8 மணிக்கு துவங்குகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.