ரவிக்கு கட்டம் கட்டும் காங்கிரஸ்: 234 தொகுதிகளிலும் களமிறங்க திட்டம்!

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் ஜனவரி 19ஆம் தேதி ஆளுநருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
கே.எஸ்.அழகிரி
அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை நடைபயணத்தின் தொடர்ச்சியாக, தமிழக காங்கிரஸ் சார்பில் ‘அரசியலமைப்பை பாதுகாப்போம்; கையோடு கைகோர்ப்போம்’ என்ற பிரச்சார இயக்கம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், செயலாளர் சிரிவெல்ல பிரசாத், மாநில துணை தலைவர் ஆ.கோபண்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, “ராகுல் காந்தியின் ஒற்றுமை நடை பயணத்தின் தொடர்ச்சியாக, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஏற்கெனவே 234 தொகுதிகளிலும் தலா 100 காங்கிரஸ் கொடிகளை ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் ஜனவரி 26ஆம் தேதி தொடங்கி 2 மாத காலத்துக்கு ‘அரசியலமைப்பை பாதுகாப்போம்; கையோடு கைகோர்ப்போம்’ என்ற பிரச்சார இயக்கத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் அவர், “காவல் துறை மற்றும் உளவு பிரிவு பின்புலம் கொண்ட ஆர்.என்.ரவி, தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டபோதே எதிர்ப்பு தெரிவித்தேன். அதை 100 சதவீதம் நிரூபிக்கும் வகையில் சட்டப்பேரவையில் அவர் நடந்துகொண்டார். தேசிய கீதம் பாடுவதற்கு முன்பாகவே பேரவையைவிட்டு வெளியேறியுள்ளார்.

அவரது ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து, தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் அவருக்கு எதிராக வரும் 19ஆம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.