திருநெல்வேலி: “இன்றைய தேதியில் முதல்வர் கூறுகின்ற திட்டம் “அலைன்மென்ட் 4 ஏ” என்று தெளிவுபடுத்தினால், பாஜக அதனை எதிர்க்கிறது. “4 ஏ” இல்லை. மத்திய அரசோடு இணைந்து புதிதாக ஒரு பாதையைக் கண்டுபிடிப்பதாக கூறினால், அதை பாஜக ஆதரிக்கும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “மாநில அரசு மத்திய அரசோடு இணைந்து அந்த “4 ஏ” அலைன்மென்டைத் தாண்டி, புதிதாக ஒரு அலைன்மென்ட் ராமர்சேது பாலத்தை எந்தவிதத்திலும் பாதிக்காத வகையில் கொண்டுவந்தால் மட்டும்தான் அந்த திட்டத்திற்கு தமிழக பாஜக ஆதரிக்கும்.
இதனால்தான், பாஜகவின் சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், ராமர்சேதுவிற்கு பாதிப்பு வராமல் இது இருக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கூறியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில், 2018 மார்ச் மாதம் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில்மனுவில் இந்த “அலைன்மென்ட் 4 ஏ” குறித்து தெரிவித்துள்ளது.
இன்றைய தேதியில் முதல்வர் கூறுகின்ற திட்டம் “அலைன்மென்ட் 4 ஏ” என்று தெளிவுபடுத்தினால், பாஜக அதனை எதிர்க்கிறது. “4 ஏ” இல்லை. மத்திய அரசோடு இணைந்து புதிதாக ஒரு பாதையைக் கண்டுபிடிப்பதாக கூறினால், அதை பாஜக ஆதரிக்கும்” என்று அவர் கூறினார்.