ஆளுநரை இழிவாக பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி – திமுகவில் இருந்து நீக்கம்!

பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமைக் கழகம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர், சமீபத்தில், சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும் போது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி விமர்சனம் செய்தார். அவர் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திமுக பேச்சாளர் இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளிப்படையாக மிரட்டும் வகையில் பேசியது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணை செயலாளர் எஸ்.பிரன்னா ராமசாமி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார் அனுப்பி உள்ளார்.

அதில், திமுக பேச்சாளர் மேடையில் ஆளுநரை அவதூறாகவும், மிரட்டும் வகையில் பேசியுள்ளார். ஆளுநரை தரம் தாழ்ந்து அவதூறாக பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது இ.பி.கோ. 124 சட்டபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமைக் கழகம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, திராவிட முன்னேற்றக் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

இவ்வாறு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.