ஈரோடு, திருவள்ளூர் மாவட்டங்களில் நிபந்தனைகளுடன் சேவல் சண்டைக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி அளிக்கக்கோரி இரண்டு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்த வழக்குகள் இன்று (ஜன.14-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: ‘ஈரோடு மற்றும் திருவள்ளூரில் நிபந்தனைகளுடன் சேவல் சண்டைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவர் மேற்பார்வையில் சேவல் சண்டை நடத்த வேண்டும்.சேவல்களை துன்புறுத்தவோ, மது கொடுக்கவோ, காலில் கத்தியை கட்டவோ கூடாது. நிபந்தனைகளை மீறினால் போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.