புதுடெல்லி: இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி மனோஜ் பாண்டே நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு (எல்ஏசி) கிழக்குப் பகுதிகளில் சீன ராணுவம் வீரர்களை படிப்படியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டோக்லாமில் சீன ராணுவத்தின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. இதனை இந்திய ராணுவம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
கிழக்கு லாடக்கிலிருந்து அருணாச்சலப் பிரதேசம் வரை யிலான 3,488 கி.மீ நீளமுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாதுகாப்பு வலுவான நிலையில் உள்ளது. போதுமான படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் எந்தவொரு சூழலையும் எதிர் கொள்ள இந்திய ராணுவம் தயாராகவே உள்ளது.
டெப்சாங் சமவெளிப் பகுதி மற்றும் டெம்சோக் பகுதியிலிருந்து ராணுவ வீரர்களை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை சீனா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. அப்பகுதிகளில் சீன ராணுவத்தினர் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். கடந்த டிசம்பர் 9-ம் தேதியன்று யாங்ட்சேயில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே நிகழ்ந்த மோதல் அதன் பிரதிபலிப்பே ஆகும்.
பயிற்சிக்காக அழைத்து வரப்படும் ராணுவத்தினர் அங்கேயே தங்கி விடுகின்றனர். எனினும் எத்தகைய தாக்குதலை யும் எப்போதும் சமாளிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது. எல்லை உள்கட்டமைப்பு மேம்பாட்டில் இந்தியாவும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் வடக்கு எல்லையில் 2,100 கி.மீ. தூரத்துக்கு சாலைகள், 7,450 மீட்டர் அளவுக்கு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கிழக்கு லடாக்கில் 500 கவச வாகனங்கள், டாங்கிகள், 400 பீரங்கி வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்கள் கட்டமைக்கப் பட்டுள்ளன. அத்துடன் 55,000 வீரர்களுக்கான வசிப்பிடப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இவை போதுமானவை அல்ல. செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.