தமிழகத்தின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை மாலை முதலே மக்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்ப தொடங்கியதால் சாலைகளில் வாகனங்கள் அலைஅலையாக சென்றன. சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் இதர பகுதிகளில் இருக்கும் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக திரண்டதால் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சென்னையில் மக்கள் கூட்டம்
சென்னையை பொறுத்தவரை பிரதான ரயில் நிலையங்களான சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் வெள்ளமென நிரம்பி வழிந்தனர். குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகளவு காணப்பட்டது. மதுரை, நெல்லை, திருச்சி, கன்னியாக்குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர் அதிக எண்ணிக்கையில் திரண்டதால் முன்பதிவில்லா ரயில் பெட்டி மூச்சுவிடுவதற்கு கூட இடமில்லாமல் இருந்தது. உடமைகள் மற்றும் குழந்தைகளை அழைத்துச் செல்வோரின் நிலை பரிதாபத்துக்குரியதாகவே இருந்தது. இடம் கிடைக்காதவர்கள் பேருந்து நிலையங்களுக்கு செல்ல தொடங்கினர்.
பேருந்து நிலையங்களிலும் கூட்டம்
ரயில் நிலையங்களைத் தொடர்ந்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் திக்குமுக்காடியது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரும் கூட்ட நெரிசலை ஒழங்குபடுத்துவதில் சிரத்தையோடு செயல்பட்டுக் கொண்டிருந்தனர். கோயம்பேடு தவிர கே.கே.நகர், தாம்பரம், தாம்பரம் ரயில் நிலைய பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் இருந்தும் மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. அனைத்து பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதேபோல், கோயம்புத்தூர், திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பொங்கலுக்கு செல்வோரின் கூட்டம் நிரம்பி வழிந்தது.
மெட்ரோ ரயிலிலும் கூட்டம்
பொங்கல் பண்டிகைக்கு செல்வோர் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்வதற்காக மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக் கொண்டனர். விரைவாக கோயம்பேடு மற்றும் சென்ட்ரல், தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு செல்ல முடியும் என்பதால், மெட்ரோ சேவையை மக்கள் தேர்ந்தெடுத்தனர். அதற்கேற்ப மெட்ரோ நிர்வாகமும் சேவையை துரிதமாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே செய்து வைத்திருந்தது.