உழைத்த வேர்வையின் உப்பு இனிப்பாக மாறும் இந்நாள் – சீமான் பொங்கல் வாழ்த்து

தமிழ்நாடு மக்கள் இன்று தை பொங்கலை அவரவர் வீடுகளில் குடும்பமாக கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
சீமான்
பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது;

மீண்டும் மீண்டும் இத்தமிழ்க்குடி

தழைக்கும், பிழைக்கும் என்ற நம்பிக்கையில்

பொங்கட்டும்

தமிழர் உள்ளங்களிலும்,

இல்லங்களிலும்

புரட்சிப் பொங்கல்!

காலையில் எழுந்து

கழனி நோக்கி நடந்து

உழுது விதைத்து

உழைத்து விளைத்து

அறுத்து அடித்து

குத்திப் புடைத்து

புதுப்பானையில் போட்டு

பொங்கலை வைத்து

அது பொங்கும் வேளையில்

மங்களம் தங்க

மகிழ்ச்சி பொங்க

பொங்கலோ பொங்கல் – என்று

குலவையிட்டு கொண்டாடும் நாள்!

உழைத்த வேர்வையின் உப்பு

இனிப்பாக மாறும் இந்நாள்

அறுவடைப் பெருநாள்!

அதுவே

தமிழர் திருநாள்!

உழவுக் குடியோர் உயிர் மாய்த்தபோதும்

நம் மீனவச் சொந்தங்கள்

துயரக்கடலில் மூழ்கியபோதும்

துன்பமும் துயரமும்

வறுமையும் ஏழ்மையும்

நம்மைத் துரத்தி, வருத்தி வீழ்த்தியபோதும்

மீண்டும் மீண்டும் இத்தமிழ்க்குடி

தழைக்கும் பிழைக்கும் என்ற நம்பிக்கையில்

பொங்கட்டும்

தமிழர் உள்ளங்களிலும்

இல்லங்களிலும்

புரட்சிப் பொங்கல்!

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள்!

நாம் தமிழர்!

என இவ்வாறு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.