'துணிவு, வாரிசு' – ஏரியாக்கள் விற்கப்பட்ட விலை எவ்வளவு?

விஜய் நடித்துள்ள 'வாரிசு', அஜித் நடித்துள்ள 'துணிவு' ஆகிய இரண்டு படங்களும் மூன்று நாட்கள் முன்னதாக ஜனவரி 11ம் தேதி வெளியாகின. இரண்டு படங்களில் எந்தப் படம் விரைவில் 100 கோடி வசூலைப் பெறப் போகிறது என இருவரது ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தப் படங்கள் எவ்வளவு விலைக்கு விற்கப்பட்டுள்ளதோ அதைப் பொறுத்தே அவற்றின் லாபம் என்ன என்பது தெரிய வரும். இரண்டு படங்களின் வியாபாரத்திற்கு நிறையவே வித்தியாசம் உள்ளது என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். 'துணிவு' படத்தை விட 'வாரிசு' படம் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. சினிமா வியாபாரத்தில் அஜித்தை விட விஜய் முன்னணியில் இருப்பதாகவே தெரிவிக்கிறார்கள்.

இரண்டு படங்களும் எந்தெந்த ஏரியாக்களில் எவ்வளவு விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து செவி வழி செய்தியாக நமக்கு வந்த தகவலைத் தருகிறோம்.

'வாரிசு' படத்தின் பட்ஜெட் விஜய்யின் சம்பளத்துடன் சேர்த்து சுமார் 200 கோடி என்கிறார்கள். தமிழக வெளியீட்டு உரிமை 70 கோடி, தெலுங்கு உரிமை 15 கோடி, கர்நாடகா 7 கோடி, கேரளா 6 கோடி, வெளிநாடுகள் 30 கோடி, ஹிந்தி உரிமை 30 கோடி. ஓடிடி, சாட்டிலைட், ஆடியோ உரிமை ஆகியவை மூலம் வெளியீட்டிற்கு முன்பாக 120 கோடி வந்துவிட்டது எனத் தகவல். தியேட்டர் வசூலைப் பொறுத்தவரையில் 175 கோடிக்கும் அதிகமாக வசூலித்தால் படம் லாபகரமாக அமையுமாம். இப்போதுள்ள நிலையில் ஹிந்தி உரிமையை லாபகரமாக எடுப்பது மட்டும் சிரமம் என்று தகவல்.

'துணிவு' படத்தின் பட்ஜெட் அஜித்தின் சம்பளத்துடன் சேர்த்து 160 கோடி என்கிறார்கள். தமிழக தியேட்டர் உரிமை 60 கோடி, தெலுங்கு உரிமை 1.5 கோடி, கர்நாடகா உரிமை 3.5 கோடி, கேரளா உரிமை 2.5 கோடி, ஹிந்தி உரிமை 20 கோடி, வெளிநாடுகள் உரிமை 15 கோடி. ஓடிடி, சாட்டிலைட், ஆடியோ உரிமை ஆகியவை மூலம் வெளியீட்டிற்கு முன்பாகவே சுமார் 90 கோடி வந்துவிட்டது எனத் தகவல். தியேட்டர் வசூலைப் பொறுத்தவரையில் 120 கோடி வசூலித்தால் படம் லாபகரமாக அமையுமாம்.

இரண்டு படங்களுமே 'டேபிள் பிராபிட்' பார்த்துவிட்டது. தியேட்டர் வசூலும் விடுமுறை நாள் என்பதால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அதனால், இரண்டு படங்களுமே நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புண்டு. லாபத்தில் எந்தப் படம் அதிக லாபம் பெறப் போகிறது என்பது இரண்டு படங்களும் ஓடி முடித்த பிறகே தெரியும்.

குறிப்பு – மேலே குறிப்பிட்டுள்ள தொகை விவரங்கள் அதிகாரப்பூர்வமற்றவை. கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல இடங்களில் விசாரித்ததன் அடிப்படையில் செவி வழி வந்த விவரங்களைத்தான் குறிப்பிட்டுள்ளோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.