ஐரோப்பிய நாடுகளில் நிலவும் குளிரில் இருந்து தப்ப குமரியில் குவியும் வெளிநாட்டு பறவைகள்

நாகர்கோவில்: ஐரோப்பிய நாடுகளில் நிலவும் குளிரில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் ரோஸி ஸ்டார்லிங் பறவைகள் அதிகளவில் மணக்குடி காயலில் குவிந்து வருகின்றன. குமரி மாவட்டத்தில் இரு பருவமழை காலம் இருப்பதாலும், இயற்கை வளம் மிகுதியாக காணப்படுவதாலும் அதிக குளங்கள், வயல்வெளிகள், நன்னீர் பகுதிகள் இருப்பதாலும் பறவைகளின் புகலிடமாக உள்ளது. மேலை நாடுகளில் கடுங்குளிர் வாட்டும்போது உணவு, உறைவிடம், பாதுகாப்பு கருதி வெளிநாட்டு பறவைகள் தங்களுக்கு சாதகமான இடங்களை தேடி அலைகின்றன. அவ்வாறான இடங்களில் குமரி மாவட்டமும் ஒன்றாக இருக்கிறது. இதனால் குமரி மாவட்டத்திற்கு அழையா விருந்தாளிகளாக வெளிநாட்டு பறவைகள் வருகின்றன. ஆனால் அவை இங்கு இனப்பெருக்கம் செய்வது இல்லை. இங்குள்ள நீர்நிலைகளில் பறவைகளுக்கு தேவையான புழுக்கள், பூச்சிகள், நண்டு, வெட்டுக்கிளிகள், சிறிய மீன்கள், நத்தைகள், தவளை, தாவரங்கள் தாராளமாக உணவாக கிடைக்கின்றன.

சுசீந்திரம் குளம், தேரூர் குளம், மணக்குடி காயல் பகுதிகளை பறவைகள் பாதுகாப்பு பகுதிகளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 2018ல் ஓகி புயலின் தாக்கத்துக்கு பின், சீதோஷ்ண நிலையும் மாறியது. இது மட்டுமின்றி நீர் நிலைகளின் ஆக்ரமிப்பு, குளங்களில் ஆகாய தாமரை வளர்ப்பு, தீ வைத்தல், பறவைகளை வேட்டையாடுதல் போன்றவற்றால் வெளிநாட்டு பறவைகளின் வரத்து குறைந்தது. குமரி மாவட்டத்தில் நீர்க்காகம், முக்குளிப்பான், வெண்கொக்கு, பாம்புதாரா, நத்தைகொத்திநாரை, கூழக்கடா, வர்ணநாரை, இருட்டு கொக்கு, மஞ்சள் மூக்கு வாத்து, தாமரை இலைக்கோழி, கானங்கோழி, நாமத்தாரா, வெள்ளை ஐபீஸ், கருப்பு ஐபீஸ், ஆற்றுமயில் ஆகிய பறவைகளை எப்போதும் பார்க்க முடிகிறது. வெளிநாடுகளில் இருந்து இடம் பெயர்ந்து பல பறவைகள் குமரி மாவட்ட நீர்நிலைகளுக்கு வருகின்றன. ஆஸ்பிரே, புளோவர், சிவப்பு ஷாங்க், பச்சை ஷாங்க், சாண்ட் பைப்பர், டெர்ன், ஊசிவால் முனை வாத்து, சாதாரண டில், சிறிய டெர்ன், காஸ்பியன் டெர்ன் ஹோவெலர், பிளமிங்கோ ஆகியன வெளிநாடுகளில் இருந்து குமரி நீர்நிலைகளுக்கு படையெடுக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் தற்போது நிலவும் குளிரில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும் இரைக்காகவும் பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து குமரி மாவட்டம் மணக்குடி காயலில் உள்ள மாங்குரோவ் காடுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஸி ஸ்டார்லிங் பறவைகள் வந்து தஞ்சம் அடைந்துள்ளன.

அதிகாலை மற்றும் அந்தி சாயும் வேளைகளில் இப்பறவைகள் வானில் ஒன்று கூடி கடலில் எழும் அலைகள் போல் மேலும் கீழுமாக அலை, அலையாக நடனமாடுவதை போல் பறக்கும் அழகை அப்பகுதி மக்கள் ஆனந்தத்துடன் கண்டு ரசித்து வருகிறார்கள். மணக்குடியில் பழையாறு கடலுடன் சேரும் இடத்தில் இந்த காயல் உள்ளது. இங்கு மாங்குரோவ் காடு உள்ளது. ரோஸி ஸ்டார்லிங் பறவைகள் வெளிநாட்டில் இனப்பெருக்கம் மட்டும் செய்து விட்டு தங்கள் இனத்தை குளிரில் இருந்து பாதுகாத்து கொள்ள இந்த மாங்குரோவ் காட்டிற்கு வந்துள்ளன. மாங்குரோவ் காட்டில் தங்கி தங்களுக்கு தேவையான இரைகளை உண்டு வருகின்றன. மணக்குடி, சாமித்தோப்பு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இந்த வகை பறவையினங்களை அதிகம் காண முடிகிறது. செப்டம்பரில் இருந்தே இடம் பெயர்ச்சி காரணமாக வெளிநாட்டு பறவைகள் வரத்து குமரி மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. இதை பாதுகாக்கும் வகையில் நீர் நிலைகள் மாசுபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பறவை ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.