திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், திருவூடல் விழா நேற்று கோலாகலமாக நடந்தது. அதையொட்டி, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் அலங்கார ரூபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து பெரிய நந்திக்கும், ராஜகோபுரம் அடுத்துள்ள திட்டி வாசல் வழியாக சூரிய பகவானுக்கும் அண்ணாமலையார் காட்சி யளித்தார். பின்னர் மாடவீதியில் 3 முறை பவனி வந்து அண்ணாமலையார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6 மணியளவில், தெற்கு மாடவீதியான திருவூடல் வீதியில் திருவூடல் விழா நடைபெற்றது. சுவாமிக்கும், அம்மனுக்கும் ஏற்படும் ஊடலை தொடர்ந்து, சுந்தரமூர்த்தி நாயனார் தூது விடுதல் வைபவம் நடந்தது. பின்னர் குமரகோயிலுக்கு அண்ணாமலையாரும், அம்மன் அண்ணாமலையார் கோயிலுக்கும் வந்தடைந்தனர். விழாவை தரிசிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
