சென்னை: “அதிமுகவில் மூக்கை நுழைக்காதீர்கள். அதிமுகவைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் ஒன்றரை கோடி தொண்டர்கள் ஒருமித்தக் கருத்தோடு இருக்கும்போது, சசிகலா கூறியிருப்பதை தேவையில்லை என்றுதான் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் கருதுவான்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் சசிகலா அதிமுகவை ஒருங்கிணைப்பது தொடர்பாக பேசியிருப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சசிகலா ஆயிரம் கருத்துகள் சொல்லலாம். ஆனால் அதெல்லாம் யாரும் பொருட்படுத்துவதாக இல்லை. அவர் எவ்வளவோ கருத்துகளைக் கூறினார், அதிமுகவைப் பொறுத்தவரை அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
அதிமுக கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாகவும் எழுச்சியாகவும் இருக்கின்ற நிலையில், சசிகலா யார் இதுகுறித்தெல்லாம் பேசுவதற்கு? தனிப்பட்ட முறையில் அவர் என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளட்டும்.
அவர் என்ன செய்யலாம் என்றால், ஓபிஎஸ், டிடிவி மற்றும் சசிகலா ஆகியோர் ஒன்றிணைந்து தனிக்கட்சி ஆரம்பித்தால் நல்ல விஷயம்தான். அதற்கு நான் குறுக்கே நிற்கமாட்டேன். இது ஜனநாயக நாடு, கட்சி ஆரம்பித்துக் கொள்ளுங்கள், கொள்கைகளை பிரகடனப்படுத்திக் கொள்ளுங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.
அதிமுகவில் மூக்கை நுழைக்காதீர்கள். அதிமுகவைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் ஒன்றரை கோடி தொண்டர்கள் ஒருமித்தக் கருத்தோடு இருக்கும்போது, சசிகலா கூறியிருப்பதை தேவையில்லை என்றுதான் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் கருதுவான்” என்று அவர் கூறினார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து, திமுகவை வீழ்த்தி, அதை எம்ஜிஆரிடம் சமர்ப்பிப்போம். அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும். எங்கள் கட்சிக்காரரை சந்திப்பதற்கு, எனக்கு என்ன பயம்? விரைவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் திட்டம் உள்ளது” என்று அவர் கூறியிருந்தார்.