விழுப்புரம் மாவட்ட அரசியலில் திமுகவைச் சேர்ந்த பொன்முடியும் அதிமுகவைச் சேர்ந்த சி.வி சண்முகமும் எதிரெதிர் துருவங்களாக இருந்து வருகின்றனர். அரசியல் மேடைகளில் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி சண்டையிட்டு வந்த நிலையில் இன்று அமைச்சர் பொன்முடியின் தம்பியும் சிறுநீரக சிகிச்சை துறையில் சிறந்த விளங்கிய மருத்துவர் தியாகராஜன் இன்று அதிகாலை காலமானார்.
அமைச்சர் பொன்முடியின் சகோதரர் இறப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் அமைச்சர் பொன்முடியின் சகோதரர் டாக்டர் தியாகராஜன் மறைவுக்கு அமைச்சர் பொன்முடியின் வீட்டிற்கு சென்று நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
அப்பொழுது அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம் வருவதை பார்த்து அவருக்கு இடம் கொடுத்து விட்டு அடுத்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார். அரசியல் களத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக் கொண்டாலும் துக்க நிகழ்வில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம் நேரில் சென்றது அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்துவதாகவே பார்க்கப்படுகிறது.