ஆபரேஷன் லோட்டஸ் ஒர்க் ஆகாது… ஏன் தெரியுமா? டிகே சிவக்குமார் தடாலடி!

கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. தேர்தல் அறிக்கைகள் மும்முரமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசை ஓடவிட்டு ஆட்சிக் கட்டிலில் அமர
காங்கிரஸ்
வியூகங்களை வகுத்து வருகிறது.

பிரியங்கா பிரச்சாரம்

இதற்காக பிரியங்கா காந்தி பிரச்சார களத்தில் குதித்துள்ளார். ஆனால் அவரது முந்தைய தேர்தல் பிரச்சாரங்கள் பெரிதாக எடுபடவில்லை. இந்த சூழலில் கர்நாடகாவில் பிரியங்காவின் பிரச்சாரம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் பேசுகையில், கர்நாடக மக்கள் புத்திசாலிகள்.

செல்வாக்கை இழந்துவிட்டது

நன்கு அரசியல் தெரிந்தவர்கள். பாஜக ஆட்சியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் செல்வாக்கை அக்கட்சி முற்றிலும் இழந்துவிட்டது. ஆட்சி நிர்வாகம் சரியில்லை. ஊழல் கரைபுரண்டு ஓடுகிறது. அரசு அலுவலகங்களுக்கு தங்கள் பிரச்சினைகள் உடன் மக்கள் செல்லும் போது உரிய தீர்வு காணப்பட வேண்டும். மேலும் இந்த அரசில் அவர்கள் பாதுகாப்பான உணர வேண்டும்.

40 சதவீத கமிஷன்

ஆனால் நடப்பதை பார்க்கும் போது எல்லாம் தலைகீழாக இருக்கிறது. பிரச்சினைகள் தீர்க்கப்படுவது இல்லை. பணம் தான் வேலை செய்கிறது. ஒப்பந்ததாரர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். குறிப்பாக அரசு ஒப்பந்தங்களுக்கு 40 சதவீத கமிஷன் கேட்ட விவகாரம் டெல்லி வரை சென்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் கமிஷன் அடித்து வேலை செய்தால் அதன்பிறகு எப்படி தரம் இருக்கும்.

ஆபரேஷன் லோட்டஸ்

இத்தகைய விஷயங்களை ஒட்டுமொத்த நாடும் பார்த்து கொண்டிருக்கிறது. நிர்வாகத் திறனில் கர்நாடகா மிகச்சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்தது. அந்த பெயர் தற்போது கேட்டுப் போனது. இதுபோன்ற காரணங்களால் பாஜகவின் ஆபரேஷன் லோட்டஸ் இனி செல்லுபடியாகாது. நாங்கள் கர்நாடக மக்களுக்கு நல்லாட்சி வழங்க முடிவு செய்துள்ளோம்.

காங்கிரஸ் தனிப் பெரும்பான்மை

இதையொட்டியே வீடுகளுக்கு தலா 200 யூனிட் மின்சாரம், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் தலா 2,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளோம். இந்த தேர்தலில் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும். எந்த ஒரு கட்சியின் தயவும் இன்றி நாங்கள் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார்.

மேலும் பேசுகையில், நான் சொல்வதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 2023 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 136 தொகுதிகளில் வெற்றி பெறும். ஊழலை ஒழிக்க தனி சட்டம் கொண்டு வருவோம். கர்நாடகாவில் மக்களின் ஆட்சி மலரும் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.