காணும் பொங்கல், செவ்வாய்க்கிழமை என்பதால் சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் அலைமோது பக்தர்கள் கூட்டம்

திருவள்ளூர்: காணும் பொங்கல், செவ்வாய்க்கிழமை என்பதால் சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 2மணி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 6வாரங்கள் தொடர்ச்சியாக இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இன்று காணும் பொங்கல் ஒருபுறம், செவ்வாய்க்கிழமை மறுபுறம் என்பதால் சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட அண்டை மாவட்ட மக்களும், அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்தும் ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். பொது தரிசனம், 50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோவிலுக்குள் வந்து சுமார் 2மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக பக்தர்கள் ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வழக்கமாகவே செவ்வாய்க்கிழமைகளில் கூட்டம் அதிகரிக்கும் சிறுவாபுரி முருகன் கோவிலில் காணும் பொங்கல் விடுமுறை என்பதால் பக்தர்கள் அதிகளவில் குவிந்துள்ளனர். பக்தர்கள் கூட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.