புதுடெல்லி: கொலீஜியத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதி இடம் பெற வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடிதம் எழுதியுள்ளார். உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமன விஷயத்தில் ஒன்றிய அரசுக்கும், உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் முறையில் நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள். இந்த நியமனங்களில் ஒன்றிய அரசு முக்கிய பங்குதாரராக இருக்க வேண்டும் என அரசு கருதுகிறது. இதற்காக கொலீஜியத்தில் நீதிபதிகளை தேர்வு செய்யும் குழுவில் ஒன்றிய அரசு, மாநில அரசின் பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கருத்து: இது பற்றி காங்கிரஸ் பொது செயலாளர் ஜெயராம் ரமேஷ் டிவிட்டரில் பதிவிடுகையில், நீதித்துறை தங்களுக்கு அடிபணிபவராக இருக்க வேண்டும் என அரசு நினைக்கிறது. பிரச்னைக்கு பரிகாரம் காண்பதை விட விஷ மாத்திரை கொடுப்பது போல் இது இருக்கிறது. நீதித்துறையை கையகப்படுத்தும் நோக்கத்துடன் ஒன்றிய அரசு இவ்வாறு மிரட்டல் விடுக்கிறது என தெரிவித்துள்ளார்.