சென்னை: சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு டிஎன்பிஎஸ்சியின் இந்தாண்டுக்கான உத்தேச கால அட்டவணையில் இடம்பெறாத நிலையில், மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு வயது வரம்பில் சலுகை அளிக்கும் அரசாணையை எதிர்நோக்கி காத்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள சிவில் நீதிபதி பணியிடங்கள் கடந்த 2014 முதல் டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வை நடத்தினாலும் நேர்முகத் தேர்வு, கலந்தாய்வு போன்றவற்றை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளே நடத்துகின்றனர்.
தமிழகத்தில் 2018-ம் ஆண்டு 320சிவில் நீதிபதிகள் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் 222 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் 2019-ல் 176 சிவில் நீதிபதிகள் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நடத்திய நேர்முகத் தேர்வில்56 பேர் மட்டுமே இறுதியில் தேர்வாகினர்.
கடந்தாண்டு 245 சிவில் நீதிபதிகளுக்கான காலியிடங்களுக்கு கடந்தாண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜூலையில் முதற்கட்ட எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்றும், 2023 ஜனவரியில் பிரதான தேர்வு நடத்தப்பட்டு, 2023 ஏப்ரலில் நேர்முகத் தேர்வு மற்றும் கலந்தாய்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி சார்பில் உத்தேச கால அட்டவணை வெளியிடப்பட்டது. ஆனால் இந்த அட்டவணைப்படி சிவில் நீதிபதிகளுக்கான தேர்வை கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் நடத்தவில்லை.
இந்நிலையில் 2023-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சியின் உத்தேச கால அட்டவணையில் சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு அறிவிப்பு இடம்பெறாதது, தேர்வை எதிர்நோக்கி காத்திருக்கும் தேர்வர்களை மீண்டும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் ஜெ.த.அஜிதா கூறும்போது, 2019-ம்ஆண்டுக்குப்பிறகு தற்போது வரை சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு நடத்தப்படவில்லை. 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கரோனாவை காரணம் காட்டி தேர்வை தள்ளிப்போட்டனர். கடந்தாண்டு தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. ஆனால் நடத்தப்படவில்லை. இந்தாண்டுக்கான உத்தேச கால அட்டவணையில் இதுதொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகாதது தேர்வை எதிர்நோக்கியுள்ள தேர்வர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பல இளம் வழக்கறிஞர்கள் இதற்காக பயிற்சி மையங்களில் சேர்ந்து தங்களை தயார்படுத்தி வருகின்றனர். பார் கவுன்சில் சார்பிலும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே கீழமை நீதிமன்றங்களில் வழக்குகளின் தேக்கம் அதிகரித்து வரும் நிலையில் சிவில் நீதிபதிகளுக்கான காலியிடங்களும் அதிகரித்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக தேர்வு நடைபெறாத சூழலில் 40 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இத்தேர்வை எழுத முடியும் என்ற நிலையை மாற்றி, தேர்வை எதிர்நோக்கியுள்ள அனைவருக்கும் வயது வரம்பில் தளர்வு அளிக்க வேண்டும்’’ என்றார்.
வழக்கறிஞர் இ.ரவி கூறும்போது, ‘‘சட்ட அறிவில் தகுதியும், திறமையும் உள்ள இளம் வழக்கறிஞர்கள் சிவில் நீதிபதிகளுக்கான தேர்வில், தகுதி அடிப்படையில் எளிதாக வெற்றி பெற முடியும் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வை எதிர்நோக்கும் இளம் வழக்கறிஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேநேரம் போட்டியும் கடுமையாக உள்ளது.
இந்தாண்டு டிஎன்பிஎஸ்சியின் உத்தேச கால அட்டவணையில் இத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகாதது குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கோரியபோது, மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு வயது வரம்பில் 10 ஆண்டுகளுக்கு சலுகை அளிக்கும் விதமாக தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கவுள்ளதால், அந்த அரசாணையை எதிர்நோக்கியுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழக அரசு இனியும்காலம் தாழ்த்தாமல் அதற்கான அரசாணையை விரைவில் வெளியிட்டு, சிவில் நீதிபதிகளுக்கான தேர்வை இந்தாண்டு விரைவாக நடத்திட வேண்டும்’’ என்றார்.