லக்னோ: “நல்ல விஷயங்களில் ஏதாவது தவறு நடக்க வேண்டும் என்று உங்களைப் போன்றவர்கள் கடவுளிடம் இரவு பகலாக வேண்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று கங்கா விலாஸ் குறித்த அகிலேஷ் யாதவின் குற்றச்சாட்டிற்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த வாரத்தில் பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து, உலகின் நீளமான நீர்வழித்தட பயண கப்பலான எம்வி கங்கா விலாஸ் சொகுசு கப்பலின் பயணத்தை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்த கப்பல் பயணம் குறித்து கருத்து தெரிவித்திருந்த சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், புனிதமான கங்கை நதியில், கங்கா விலாஸ் என்ற பெயரில் பார் நடத்துகிறார்கள் என்று பாஜக அரசாங்கத்தை தாக்கியிருந்தார். மேலும், திங்கள் கிழமை கங்கா விலாஸ் குறித்த வீடியோ செய்தி ஒன்றை பகிர்ந்து, “உங்களுக்கு படகிற்கும் சொகுசு கப்பலுக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா, இப்போது சிக்கிக்கொண்டிருக்கும் பயணிகளை மீட்க வாயு விலாஸ் அனுப்பப்படுமா” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கிடையில், கங்கா விலாஸ் சொகுசு கப்பல் திட்டமிட்டமிட்டபடி பாட்னாவை அடைந்தது என்றும் கப்பல் சாப்ராவில் சிக்கிக்கொண்டது என்ற செய்தியில் உண்மையில்லை. அது திட்டப்படி தனது பயணத்தை கங்கா விலாஸ் தொடங்கும் என்று இந்திய நீர்வழி ஆணையம்(IWAI)தெரிவித்துள்ளது. சாப்ராவின் சிஓ சதேந்திர சிங், கூறுகையில், “உள்ளூர் செய்தியாளர்கள் என்னிடம் கேள்விகளால் துளைத்தனர். நான் அவர்களிடம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில பேரிடர் மீட்பு குழுவின் படகுகள் அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மற்றபடி வேறு எந்த பிரச்சினையும் இல்லை” என்று தெரிவித்திருந்தார்.
கங்கா விலாஸ் செகுசு படகை இயக்கும் ‘ஹெரிடேஜ் ரிவர்ஸ் ஜர்னிஸ்’நிறுவனத்தின் சேர்மன் ராஜ் சிங் செய்தி நிறுனம் ஒன்றிடம் கூறுகையில்,” அந்த இடத்தில் ஆறு ஆழமாக இல்லை. நீங்கள் மிதவைப்படகுகளைப் பயன்படுத்தி கரைக்குச் சென்று இடங்களைச் சுற்றிப்பார்த்துவிட்டு படகுக்கு திரும்பலாம். சொகுசுப்படகு நதியின் ஆழமான பகுதியில் நிற்கும் என்றே தெரிவிக்கப்பட்டது. இது வழக்கமான நடைமுறைதான்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் ,இந்திய உள்ளூர் நீர்வழித்தட ஆணையத்தின் செய்தியை மேற்கோள் காட்டி அகிலேஷ் யாதவின் குற்றச்சாட்டிற்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,” உங்களைப் போன்றவர்கள் எல்லாம் நல்ல விஷயத்தில் ஏதாவது தவறாக நடக்க வேண்டும் என்று இரவு பகலாக கடவுளிடம் வேண்டிக்கொண்டே இருப்பீர்கள். உங்களின் மேலான கவனத்திற்கு கங்கா விலாஸ் சொகுசுக்கப்பல் குறித்த நேரத்தில் பாட்னா சென்றடைந்துவிட்டது. அது தனது அடுத்த இலக்கான பெகுசாரையையும் குறித்த நேரத்தில் சென்றடையும் என்பதை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கங்கா விலாஸ்: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து வங்கதேசம் வழியாக அசாமின் திப்ரூகருக்கு சொகுசு கப்பல் இயக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ‘எம்வி கங்கா விலாஸ்’ என்ற சொகுசு கப்பல் கொல்கத்தாவில் தயாரிக்கப்பட்டது. இந்த கப்பலை ‘ஹெரிடேஜ் ரிவர்ஸ் ஜர்னிஸ்’ என்ற தனியார் நிறுவனம் இயக்குகிறது. உலகிலேயே ஆற்றில் மிக நீண்ட தூரம் பயணம் செய்யும் கப்பல் இதுதான்.
இந்த கப்பலில் வாரணாசியில் இருந்து திப்ரூகர் செல்ல 52 நாட்கள் ஆகும். 3,200 கி.மீ-க்கும் மேற்பட்ட தூரம் இந்த கப்பல் செல்கிறது. இதன் வழியில் உ.பி., பிஹார், ஜார்க்கண்ட், அசாம் மேற்கு வங்கம் என 5 மாநிலங்களும், அண்டை நாடான வங்கதேசமும் வருகின்றன. இங்குள்ள உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், தேசியப் பூங்காக்கள், படித்துறைகள், பிஹாரின் பாட்னா , ஜார்கண்ட்டின் சாகிப்கஞ், மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, வங்கதேசத் தலைநகர் தாகா, அசாம் மாநிலத்தின் குவாஹாட்டி நகரங்கள் உட்பட 50 சுற்றுலா தலங்களை இந்த கப்பலில் செல்லும் சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம்.