பல்வேறு சிறப்புகள் கொண்ட திருத்தலம்; வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் அற்புதங்கள்!

ஈசன் அர்த்தநாரியாகக் காட்சிகொடுக்கும் தலங்கள் மிகவும் மகத்துவம் வாய்ந்தவை.கணவனும் மனைவியும் பிரியக் கூடாத இணைகள் என்பதை இந்தப் பிரபஞ்சத்துக்கு உணர்த்தும் அற்புதத் திருவடிவம் அர்த்தநாரீஸ்வரர் வடிவம். இந்தக் கோலத்தில் ஈசன் காட்சி கொடுத்ததன் பின்னணியில் உள்ள புராண சம்பவம் மிகவும் சுவாரஸ்யமானது.

பிருகு முனிவர் தீவிர சிவ பக்தர். ஒருமுறை கயிலாயம் சென்ற அவர் சிவனை மட்டுமே வலம் வந்து செல்ல இதைக் கண்ட ந்னை பார்வதி கடும் கோபம் கொண்டார். ‘சக்தியில்லையேல் சிவமில்லை’ என்பதை உலகிற்கு உணர்த்த விரும்பினார்.

இமயமலை நீங்கி பூலோகம் வந்து ஒரு சிந்தை மரத்தடியில் லிங்கத்தை நிறுவி பூசைகள் செய்து வழிபட்டுத் தவம் செய்தார். பார்வதி தேவியின் கடுமையான தவத்தினை கண்டு மகிழ்ந்த ஈசன், சக்தியின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு ‘நாமிருவரும் சரிபாதியாக இணைவோம்’ என்று தனது இடது பாதியை சக்திக்கு கொடுத்து, ‘சிவனும் சக்தியும் ஒன்றே’ என்று பிருங்கி முனிவருக்கும் உலகிற்கும் எடுத்துரைத்து அர்த்தநாரீசுவரராகக் காட்சி கொடுத்தார். 

வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர்

பண்டைய காலத்தில் பொதிகை மலை சார்ந்த பகுதிகளை ஆண்டு வந்தான் சேர மன்னன் ரவிவர்மன். அவனது மகன் குலசேகரன் கடும் நோயினால் அவதியுற்றான். எல்லாவிதமான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டாலும் அவனுக்கு நோய் குணமாகவில்லை. இதனால் மன்னன் ரவிவர்மன் மிகுந்த கவலையடைந்தான்.

வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர்

அந்த நேரத்தில் அவ்விடம் வந்த சிவனடியார் ஒருவர் ” மன்னா, உன் தேசத்திலேயே இருக்கும் வாசுதேவநல்லூர் என்னும் திருத்தலம் செல். அங்குள்ள திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அர்த்தநாரீஸ்வரருக்கு தொண்டு செய்துவா. உன் தவ புதல்வன் இந்த நோயிலிருந்து விடுபடுவான்!” என்று கூறிச் சென்றார்.

உடனே மன்னன் ரவிவர்மனும் தன் மகனைக் கூட்டிக்கொண்டு அத்தலத்துக்குச் சென்று அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டான். அங்கேயே தங்கியிருந்து புனித தீர்த்தமான கும்ப புஷ்கரணியில் ஒரு மண்டலம் நீராடி ஈசனை வழிபட்டுவந்தான். அவனது நோயும் பூரணமாய் குணமாக, நல்ல உடல்நலத்துடன் அவன் நாடு திரும்பினான்.  இந்தத் தலத்தின் மகிமை நாடெங்கும் பரவியது.

14 – ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னன் சடையவர்மன் குலசேகர பராக்கிரமபாண்டியன் இந்தத் திருக்கோயிலை விரிவுபடுத்திக் கட்டினான்.

பொதுவாக சிவாலயங்களில் ஈசன் சிவலிங்கத் திருமேனியாகவே காட்சிக்கொடுப்பார். ஆனால், இத்தலத்தில் உமையொரு பாகனாய் நின்ற கோலத்தில் தன் இடப்பக்கத்தில் பாகம்பிரியாள் என்ற திருநாமத்தோடு அருளும் இடப்பாகவள்ளி அம்மையுடன் அர்த்தநாரீஸ்வரராக சிந்தாமணிநாத்ராகக் காட்சிக் கொடுக்கிறார். புளிய மரத்திற்கு அடியில் அர்த்தநாரீஸ்வரர் வீற்றிருப்பதால், ‘சிந்தாமணிநாதர்’ என்று திருநாமம் ஏற்பட்டது.

அர்த்தநாரீசுவரர் சிந்தாமணிநாதர்

சுவாமி,கிழக்கு நோக்கிய கருவறையில் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி் அருள்கிறார். திருமேனியில் வலப்பாகத்தில் தலையில் கங்கையும் சந்திரனும், கரங்களில் சூலம், கபாலம், காதில் தாடங்கம் காலில் தண்டம், சதங்கையும் இருக்கிறது. அம்பாளுக்குரிய இடப்பாகத்தில் ஜடையும் கைகளில் பாசம், அங்குசம், பூச்செண்டு காதில் தோடு மற்றும் காலில் கொலுசும் இருக்கிறது. சுவாமி பாகத்திற்கு வேஷ்டியும், அம்பாள் பாகத்திற்கு சேலையும் அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது.

இங்குள்ள நடராஜர் சந்தனத்தால் ஆன சந்தன நடராஜராக அருள் புரிகிறார். பொதுவாக பைரவர் தன் வாகனமான நாய் உடன் காட்சிகொடுப்பார். ஆனால் இங்கு பைரவருக்கு வாகனம் இல்லை. கைகூப்பிய நிலையில் சண்டிகேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இந்த கோயிலின் தலவிருட்சமான புளிய மரத்தில் கிடைக்கும் புளி இனிப்பு, புளிப்பு என்று இரு சுவைகளையும் தருகிறது.

இத்தலத்தின் மற்றொரு விசேஷம், ஐப்பசி மாத பௌர்ணமியில் இங்கு அன்னாபிஷேகம் நடைபெறுவதில்லை. மாறாக, சித்திரை மாதப் பௌர்ணமியி்லேயே இங்கு அன்னாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெறும். அந்த நாளில் பிருங்கி முனிவருக்கு சிவபெருமான் அர்த்தநாரீசுவரராக காட்சி கொடுக்கும் வைபமும் சிறப்பாக நடைபெறும். ஆனிப் பெருந்திருவிழா, திருக்கார்த்திகை திருவிழா, திருவாதிரை போன்ற திருவிழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.

சனிபகவான்

பிள்ளை பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள அர்த்தநாரீஸ்வரரை வேண்டிக்கொண்டு இங்குள்ள நதியில் நீராடினால் கரு உண்டாகும் என்பது நம்பிக்கை. அதனால்தான் இந்த நதிக்கு ‘கருப்பை நதி’ என்ற பெயர் வந்தது. அதுவே பின்நாளில் ‘கருப்பாநதி’ என்றானது. மேலும் பிரிந்த தம்பதியினர் இத்தலம் வந்து அர்த்தநாரீஸ்வரரை தரிசித்தால் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ்வர் என்பது ஐதிகம்.

வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில்

செல்லும் வழி: தென்காசியிலிருந்து 40 கி.மீ தூரத்திலும் ராஜபாளையத்திலிருந்து 35 கி.மீ தூரத்திலும் வாசுதேவநல்லூர் அமைந்துள்ளது. தென்காசியிலிருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் வாசுதேவநல்லூர் செல்லலாம். சிந்தாமணிநாத சுவாமி திருக்கோயில் வாசுதேவநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 1கி.மீ தொலைவில் ஊரின் நடுவே உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.