பார்வேட்டை உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்திற்கு எழுந்தருளி பார்வேட்டை உற்சவம் கண்டருளுவது வழக்கம். அதன்படி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் புறப்பட்ட வரதராஜ பெருமாள் வாலாஜாபாத், வழியாக கிராமங்கள் தோறும் மண்டகப்படி கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலை மீது எழுந்தருளினார்.

பழைய சீவரம் மலைமீது எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அபிஷேக ஆராதனைகள், நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மாலை வெயில் வரதராஜ பெருமாள் மீது படும்படி மலையில் இருந்து ஒய்யாரமாக இறக்கப்பட்டார்.

மலையிலிருந்து இறங்கிய வரதராஜ பெருமாளை பழைய சீவரத்தில் கோவில் கொண்டுள்ள லட்சுமி நரசிம்ம ஸ்வாமி பெருமாள் எதிர்கொண்டு அழைத்து செல்ல இரண்டு பெருமாள்களும் பக்தர்களுக்கு சேவை சாதித்து காட்சி அளித்தனர்.

ஆண்டுக்கு ஒரு முறை தை மாதம் மாட்டுப் பொங்கல் அன்று நடைபெறும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் பழையசீவரம் பார்வேட்டை உற்சவத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

முன்னதாக கடந்த 15 ஆம் தேதி அன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இரவு பார்வேட்டை உற்சவத்தை முன்னிட்டு, பழையசீவரம் பகுதிக்கு செல்வார். இந்த ஆண்டு வரும் பொங்கல் அன்று இரவு 9:30 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு செல்லும் வழியில் மண்டகப்படி நடைபெற்றது. அங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் முடிந்து, மாலை 4:00 மணிக்கு மலையில் இருந்து இறங்கி அடிவாரத்தில் அங்கு உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சென்றார். பின், வரதர் மற்றும் லட்சுமி நரசிம்மர் இருவரும் சேர்ந்து திருமுக்கூடல் பகுதியில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சென்றனர். அங்கு ஐந்து ஊர் பெருமாள் ஒரே இடத்தில் எழுந்தருளினர் என்பது குறிப்படத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.