புதுடெல்லி: புவனேஷ்வரில் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் 17 கிலோ தங்கம், ரூ.1.57 கோடி ரொக்கம் உள்பட ரூ.15 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒடிசாவின் புவனேஷ்வர் பகுதியை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி பிரமோத் குமார் ஜெனா. 1987ம் ஆண்டு இந்திய ரயில்வே சேவை அதிகாரியாக தேர்வு பெற்ற இவர் கடைசியாக புவனேஸ்வரில் ரயில்வே முதன்மை தலைமை வர்த்தக மானேஜராக இருந்து கடந்த ஆண்டு நவம்பரில் ஓய்வு பெற்றார். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து இவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த 3ம் தேதி சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.
இதில் 17 கிலோ தங்கம், ரூ.1.57கோடி ரொக்கப்பணம், வங்கி மற்றும் இதர நிறுவனங்கள் வைப்பு தொகை ரூ.2.5கோடி மற்றும் ஏராளமான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
மேலும் இவரது மனைவி ரோசினா ஜெனா எந்தவேலையும் செய்யவில்லை. ஆனால் ஆண்டுதோறும் வருமான வரிக்கணக்கு காட்டி வந்துள்ளார். பிரமோத்குமார் ஜெனாவுக்கும் ரயில்வே வேலையில் வரும் மாதச்சம்பளம் தவிர வேறு எந்தவருமானமும் இல்லை. இவர்களது மகளும் எந்தவேலையும் இல்லாமல் வருமானவரி கட்டி வந்துள்ளார். 2005ல் அவர் ரூ.4.53 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் ஒரு பிளாட் இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார்.
ஆனால் 2020ல் ரூ.4.33 கோடிக்கு கணக்கு காட்டியுள்ளார். 2005ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அவரது சம்பள கணக்குப்படி பார்த்தால் ரூ.3.25 கோடிதான் வரவு வந்திருக்க வேண்டும். கூடுதலாக ரூ.1.92 கோடி சம்பள கணக்கு மட்டும் அவர் காட்டியுள்ளார். இது மட்டும் அவரது முறையான சம்பளத்தை விட 59 சதவீதம் அதிகம் ஆகும். எனவே அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.15 கோடி சொத்துகள் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.