ராகுல் காந்தியை கட்டிப்பிடிக்க முயன்ற நபர்: இந்திய ஒற்றுமை யாத்திரையில் பாதுகாப்பு மீறல்?

புதுடெல்லி: தற்போது பஞ்சாப் மாநிலத்தில் நடந்து வரும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை செவ்வாய்கிழமை காலையில் ஹோசியார்பூர் தாண்டா என்ற இடத்தில் இருந்து தொடங்கியது. யாத்திரையின்போது கூட்டத்தில் ராகுல் காந்தியை நோக்கி ஓடிவந்த ஒருவர், திடீரென ராகுல் காந்தியை கட்டிப்பிடிக்க முயன்றார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை அப்புறப்படுத்தினர்.

இது குறித்து பதிவான வீடியோவில், ஆரஞ்சு வண்ண உடை அணிந்து வந்த நபர் ஒருவர் கூட்டத்தில் முன்னால் நடந்து கொண்டிருக்கும் ராகுல் காந்தியை நோக்கி ஓடிவருகிறார். அவர் ராகுல் காந்தியை கட்டிப்பிடிக்க முயற்சி செய்கிறார். இதனை எதிர்பார்க்காத ராகுல் சற்று பின்வாங்குகிறார். அதற்குள் அங்கு இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை தடுத்து அப்புறப்படுத்துகின்றனர்.

ராகுல் காந்தியின் பாதுகாப்பு ஏற்பாட்டில் பல மீறல்கள் உள்ளதாக, காங்கிரஸ் குற்றம்சாட்டி அவரது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று கூறிய ஒரு வாரத்திற்கு பின்னர் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் அம்பிந்தர் சிங் ராஜா வார்ரிங் கூறும்போது, “யாத்திரையில் எந்த பாதுகாப்பு மீறல்களும் இல்லை. மக்கள் ராகுல் காந்தியை காண விரும்புகிறார்கள். அவரும் அவர்களை வரவேற்கிறார். அந்த மனிதர் பாதுகாப்பு சோதனைகளுக்கு பின்னரே ராகுல் காந்தியிடம் வந்தார். ராகுல் காந்தியைப் பார்த்த பரவசத்தில் அவரைக் கட்டிப்பிடிக்க முயற்சித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கி இந்திய ஒற்றுமை யாத்திரை இம்மாதம் 30-ம் தேதி காஷ்மீரின் ஸ்ரீநகரில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், காஷ்மீரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொள்ளும்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஒரு சில இடங்களில் நடைபயணத்தைத் தவிர்த்து வாகனத்தில் செல்லுமாறு அவருக்கு மத்திய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ராகுல் காந்தியின் பயணப் பாதையின் பாதுகாப்பு அம்சங்கள், அவர் இரவில் தங்குமிடத்தின் பாதுகாப்பு அம்சங்கள் ஆராயப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் காந்திக்கு இப்போது Z+ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அவரைச் சுற்றி 24 மணி நேரம் 8 முதல் 9 கமாண்டோக்கள் பாதுகாப்பில் இருப்பார்கள். கடந்த மாதம் ராகுல் காந்தி தனது யாத்திரையின் வழியில் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு கோரியிருந்தார். அதற்குப் பதிலளித்த மத்திய அரசு, ராகுல் காந்தியே கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 100 முறைக்கு மேல் பாதுகாப்பு வளையத்தை மீறியிருக்கிறார் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.