தமிழகத்தின் டாஸ்மாக் கடைகளில் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் நடைபெறும் போது வழக்கமான வருவாயை விட பல மடங்கு விற்பனை அதிகமாக இருக்கும். அந்த வகையில், பொங்கலை முன்னிட்டு அரசு எக்கச்சக்க முன்னேற்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளை தயாராக வைத்திருந்தது.
இந்த வருடம் பொங்கல் பண்டிகை சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வந்த காரணத்தால் வழக்கத்தை விட அதிகப்படியான விற்பனை இருந்தது. பொங்கல் பண்டிகைக்கான சரக்கு விற்பனையானது 13ஆம் தேதி முதல் துவங்கி விட்டது. சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு கிழமைகளிலும் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான மது விற்று தீர்ந்துள்ளது.
மாட்டுப் பொங்கல் அன்று திருவள்ளுவர் தினமும் சேர்ந்து வந்ததால் அன்று டாஸ்மாக் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆகவே, சூரிய பொங்கல் நாளில் குடிமகன்கள் மறுநாளுக்கும் தேவையான மது பாட்டில்களை வாங்கி குவித்தனர். இதனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிகப்படியாக மது விற்பனையாகியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் ரூ.450 கோடிக்கு மது விற்பனையாகி இருப்பதாக கூறப்படுகிறது. சனிக்கிழமை ரூ.250 கோடியும், வெள்ளிக்கிழமை ரூ.150 கோடியும் மது பாட்டில்கள் இருக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்று காணும் பொங்கல் என்பதால் வழக்கத்தை விட இரண்டு மடங்கு மது விற்பனை இருக்கும்.ஆகவே இன்று 350 கோடிக்கு குறையாமல் மது விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நகர் பகுதிகளில் இருக்கும் பலரும் பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு சென்றிருப்பதால் கிராமப்புறத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் அதிகப்படியான விற்பனை இருக்கக்கூடும். ஆகவே, மொத்தத்தில் பொங்கல் பண்டிகை நாட்களில் மது விற்பனை தமிழகத்தில் மட்டும் ரூ.1000 கோடியை தாண்ட வாய்ப்புள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.