விவசாய மின் இணைப்பு: கிண்டலடித்த அதிகாரி; பாடம் புகட்டிய விவசாயிகள்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயத்திற்கு மின் இணைப்பு கேட்டு ஏராளமான விவசாயிகள் விண்ணப்பித்திருக்கின்றனர். ஆனால் மின் இணைப்பு கொடுப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

விவசாய மின் இணைப்பு

லாத்தூர் மாவட்டத்தில் உள்ள நிலங்கா மற்றும் அதனை சுற்றி இருக்கும் கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் பலரும் அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகும் கூட மின் இணைப்பு கொடுக்காமல் அதிகாரிகள் இழுத்தடித்தனர். இதனால் அடிக்கடி மின்சார வாரிய அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பணம் தான் கொடுத்துவிட்டோமே பிறகு ஏன் இணைப்பு கொடுக்க மறுக்கிறீர்கள் என்று விவசாயிகள் கேட்டதற்கு, அங்கு இருந்த அதிகாரி சைலேஷ் பாட்டீல், மின் இணைப்பு பெறுவது என்பது திருமணம் செய்வது போன்றது.

மின் இணைப்பு கேட்டு பணம் கட்டுவது திருமணத்திற்கு நிச்சயதார்த்தம் செய்வது போன்றது என்றும், மின் இணைப்பு வந்தால்தான் திருமணம் நடக்கும் என்றும், விவசாயத்திற்கும் மின்சாரம் கிடைக்கும் என்று கிண்டலாக பேசிக்கொண்டிருந்தார்.

இதையடுத்து அந்த அதிகாரிக்கு தக்க பாடம் புகட்ட விவசாயிகள் அனைவரும் மணமகன் வேடம் அணிந்து குதிரை வண்டியில் உள்ளூர் மின்சார வாரிய அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர். கூட பேண்ட் வாத்திய கோஷ்டியும் சென்றது. விவசாயிகளுடன் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களும் கலந்து கொண்டனர். மின்சார அலுவலகத்திற்கு குதிரையில் திருமண ஊர்வலம் வருவதை பார்த்த ஊழியர்கள் என்னவென்று தெரியாமல் குழம்பினர்.

திருமண கோலத்தில் விவசாயிகள்

சந்தோஷ் ஹிராஸ் என்ற விவசாயி இது குறித்து கூறுகையில், “எனது தோட்டத்தில் போர்வெல் இருக்கிறது. இதன் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் பிரச்னை தீர்ந்துவிடும் என்று நினைத்தேன். மின் இணைப்பு கேட்டு பணம் கட்டி அனைத்து நடைமுறைகளையும் முடித்துவிட்டேன். ஆனாலும் மின் இணைப்புக்காக காத்திருக்கிறேன். அதிகாரிகள் மின் இணைப்பு கொடுக்க மறுக்கின்றனர். நான் இது குறித்து கேட்பதற்காக சென்ற போது அங்கு இருந்த அதிகாரிகள் பணம் கட்டினால் அது திருமணத்திற்கு நிச்சயதார்த்தம் முடிந்திருப்பதாக மட்டும்தான் அர்த்தம். எப்போது திருமணம் என்பதை எங்களால் சொல்ல முடியாது என்று தெரிவித்தனர். எனவேதான் திருமணத்திற்கு நாங்கள் தயாராக வந்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

இந்த நூதன போராட்டம் சமூக ஆர்வலர் லிம்பன் மகாராஜ் என்பவர் தலைமையில் நடந்தது. இதேபோல நிலங்கா தாலுகாவில் ஏராளமான விவசாயிகள் பணம் கட்டிவிட்டு மின் இணைப்புக்காக காத்திருக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.