புதுக்கோட்டை: “புதுக்கோட்டை மாவட்டத்தில் இரட்டைக் குவளை முறை கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஆனால், அவ்வாறு இருப்பதாக கிளப்பிவிடப்படுகிறது” என சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தொட்டியில் கழிவு நீர் கலக்கப்பட்ட வேங்கைவயலில் சமத்துவப் பொங்கல் விழா இன்று (ஜன.17) நடைபெற்றது. ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, கந்தர்வக்கோட்டை தொகுதி எம்எல்ஏ எம்.சின்னதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், இறையூர் அய்யனார் கோயிலில் பொதுமக்களோடு அனைவரும் வழிபட்டனர். அதன்பிறகு, செய்தியாளர்களிடம் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியது: “குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் குறித்து 80-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை செய்தனர். எனினும், தவறு செய்தது யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. வழக்கில் முன்னேற்றம் ஏற்படாததால் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக முதல்வர் மாற்றி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் குற்றம் செய்தது யார் என்று விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள்.
இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை யூகங்கள் அடிப்படையில் பேசினால் புலன் விசாரணைக்கு இடையூறு ஏற்படும். மேலும், திசை திருப்பும் வகையில் அமைந்துவிடும். எனவே, அவ்வாறு பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த இடத்திலும் இரட்டைக் குவளை முறை இல்லை. அவ்வாறு இருப்பதாக ஆதாரத்தோடு கூறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், இரட்டைக் குவளை முறை இருப்பதாக கிளப்பி விடப்படுகிறது. இறையூரில் இரட்டைக் குளை முறை இருப்பதாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் உண்மை இருக்கிறதா என்று முழு விசாரணைக்குப் பிறகுதான் தெரிய வரும்.
கழிவு நீர் கலக்கப்பட்ட விவகாரத்தில் தவறு செய்தவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்காக தமிழக காவல் துறையே தோல்வி அடைந்து விட்டதாக கூறமுடியாது.
அவர்களுக்கு பல்வேறு பணிகள் இருக்கிறது. ஆகையால் தான் இந்த இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது. உண்மைக் குற்றவாளி கைது செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே சிபிசிஐடி வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதனிடையே, ‘இங்கு வந்த அமைச்சர்கள் ஒரு தரப்பினரை மட்டுமே பார்த்து பேசி விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர். மற்றொரு தரப்பினரை பார்க்கவோ, பேசவோ செய்யவில்லை. மேலும், அய்யனார் கோயில் வழிபாட்டுக்கு எங்களையும் அழைக்கவில்லை. இவ்வாறு பாரபட்சத்தோடு நடத்தப்படுகிறது’ என குற்றம்சாட்டிய பெண்கள், அங்கிருந்த இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி மற்றும் போலீஸாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் கூறியதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது . இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.