ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் துருக்கியில் மரணம்; கடைசி ஆசைப்படி ஹைதராபாத்தில் உடல் அடக்கம்..!

ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் முக்காராம் ஜா என அறியப்படும் மீர் பர்காத் அலி கான் உடல்நலக் குறைவால் துருக்கியில் காலமானார். அவருக்கு வயது 80. அவருடைய கடைசி ஆசையின்படி, ஹைதராபாத்தில் அவரது உடல் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் வசித்து வந்தவர் மீர் பர்காத் அலி கான். முக்காராம் ஜா என பிரபல பெயரால் அறியப்படும் இவர், ஹைதராபாத்தின் ஏழாம் நிஜாம் என அழைக்கப்படும் மீர் உஸ்மான் அலி கான் என்பவரின் பேரன் ஆவார்.

இந்நிலையில், உடல்நலக் குறைவால் அவர் காலமானார். 80 வயது நெருங்கிய அவரது உடல் இன்று மாலை ஹைதராபாத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அவர் தனது சொந்த ஊரில் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என குடும்பத்தினரிடம் முன்பே விருப்பம் தெரிவித்து உள்ளார். அதன்படி, மீர் பர்க்கத்தின் குடும்பத்தினர் அவரது உடலுடன் ஹைதராபாத்துக்கு வருகின்றனர்.

விமான நிலையத்தில் இருந்து மாலை 5 மணியளவில் சவுமஹல்லா அரண்மனைக்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து, நாளை காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரை பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக உடல் வைக்கப்படும். பின்னர், மெக்கா மசூதியில் அவரது தந்தை ஆசம் ஜாவின் கல்லறை அருகே அவரது உடல் அடக்கம் மாலை 4 மணியளவில் நடைபெறும்.

அவரது மறைவுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், இளவரசர் முக்காராம் ஜாவுக்கு, ஏழைகளுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சமூக சேவை செய்ததற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் உயரிய மாநில கவுரவத்துடன் இறுதி சடங்குகளை நடத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முக்காராம் ஜா, கடந்த 1933-ம் ஆண்டு அக்டோபரில் பிறந்தவர். இவரது தந்தை ஆசம் ஜா. தாயார், துருக்கி நாட்டின் கடைசி சுல்தானான அப்துல் மஜித் (ஒட்டாமன் பேரரசு) என்பவரின் மகள் துர்ரே ஷெவார் ஆவார். ஜாவுக்கு 4 மனைவிகள் மற்றும் 5 குழந்தைகள் உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.