சென்னை: நீட் தேர்வு விலக்கு தொடர்பான வழக்குகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. பின்னர் மனுவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவாக தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “நீட் தேர்வு வேண்டாம் என்று கூறி கடந்த 2010-ம் ஆண்டு வெளியிடப்பட்ட நீட் தேர்வு அறிவிக்கைக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நீட் தேர்வு கட்டாயம் என்று கடந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டு கொண்டு வந்த சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்த்து
இந்த வழக்கு கடந்த ஜனவரி 3ம் தேதி மாதம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, “குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா நெடுநாட்கள் நிலுவையில் இருப்பதன் மூலம், நீட் சட்டத்தின் அடிப்படைத் தன்மை குறித்து கேள்வி எழுப்பக் கூடாது என்பது உங்களுக்கு புரியவில்லையா?” என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் வழக்கு விசாரணை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நீட் தேர்வு விலக்கு தொடர்பான வழக்குகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜன.18) தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர், மருத்துவத்துறை செயலாளர், அரசு தலைமை வழக்கறிஞர், சட்டத்துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.