நியூயார்க், பாகிஸ்தானைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் மக்கி என்ற பயங்கரவாதியை, ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில், நேற்று சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவரும், மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையாகச் செயல்பட்டவருமான ஹபீஸ் சயீதின் உறவினர் அப்துல் ரஹ்மான் மக்கியை, சர்வதேச குற்றவாளியாக அறிவிக்க, இந்தியா கடந்த ஆண்டு ஐ.நா.,விடம் வலியுறுத்தியது.
ஆனால், இதற்கு சீனா முட்டுக்கட்டை போட்டது. ஏற்கனவே, ஹபீஸ் சயீதையும் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க முயன்ற இந்தியாவின் நடவடிக்கைக்கு, சீனா முட்டுக்கட்டை போட்டது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளை சர்வதேச பட்டியலில் சேர்க்க இந்தியா வலியுறுத்தும் போதெல்லாம், சீனா அதை தட்டிவிடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால், சீனாவை கடுமையாக இந்தியா விமர்சித்தது.
ஆனாலும், இந்தியாவும், அமெரிக்காவும் தங்களது உள்நாட்டு சட்டப்படி, அப்துல் ரஹ்மான் மக்கியை பயங்கரவாதியாக கடந்த ஆண்டு அறிவித்தன.
இந்நிலையில், லஷ்கர் – இ – தொய்பா மற்றும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினர் மற்றும் அவற்றுடன் தொடர்புடையவர்கள், குழுக்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு தடை விதித்து, ஐ.நா., பாதுகாப்புக் குழு தீர்மானம் கொண்டு வந்தது.
இதன் அடிப்படையில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கர வாதியாக நேற்று அறிவித்தது.
அப்துல் ரஹ்மான் மக்கி, இந்தியாவில் குறிப்பாக காஷ்மீர் பகுதியில் நாசவேலைகள் புரிவதற்கு இளைஞர்களை சேர்ப்பது, லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவது ஆகியவற்றில் முக்கிய செயலாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா., சபையின் இந்த நடவடிக்கையை இந்தியா வரவேற்று உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்