Sports Round Up : ஹர்திக் பாண்டியாவின் சர்சைக்குரிய அவுட் முதல் காயத்தால் தோற்ற நடால் வரை!

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்புக்கு எதிராகப் போராட்டம்:

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் செயல்பாடுகளைக் கண்டித்து மல்யுத்த வீரர்கள் டெல்லியில் உள்ள ஜன்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். ஒலிம்பிக் போட்டியின் போது முறையான பயிற்சியாளர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட்டுகள் இல்லை எனவும், தங்களின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடுவதாகவும் வேதனை தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து குரல் எழுப்பினால், அச்சுறுத்தப்படுவதாக மல்யுத்த வீரர் வீராங்கனைகள்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பிரக்ஞானந்தாவின் மற்றுமொரு மைல்கல்:

டாடா ஸ்டீல் செஸ் ஓப்பன் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீரரான சீனாவின் டிங் லிரினை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. மிகவும் கடினமான இந்த ஆட்டத்தில் 73 நகர்தல்களில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 2.5 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்திற்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா.

மற்றொரு போட்டியில் உலக சாம்பியன் மாக்னஸ் கால்சனை வீழ்த்தினார் அனிஷ் கிரி. இதனால் நடைபெறவிருக்கும் ஐந்தாம் சுற்றுப் போட்டியில் அனிஷ் கிரியை எதிர்கொள்கிறார் பிரக்ஞானந்தா.

பிரக்ஞானந்தா

காயத்தால் தோல்வியடைந்த நடால்:

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் அமெரிக்க வீரரான மெக்கன்ஸி மெக்டொனால்ட்டிடம் 6-4,6-4,7-5 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார் ரஃபேல் நடால். இது குறித்துப் பேசிய நடால், இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாகத் தான் மனதளவில் சிதைந்துபோனதாகக் கூறினார்.மேலும் இதனால் தன்னால் சரியாக விளையாட இயலவில்லை என வருந்தவும் செய்தார். கடந்த ஆஸ்திரேலிய ஓபனை நடால்தான் வென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஃபேல் நடால்

கில் சாதனை:

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் முதல் பந்து வீசிய நியூசிலாந்து அணிக்கு எதிராக 349 ரன்களை குவித்தது இந்திய அணி. அட்டகாசமாக விளையாடிய சுப்மன் கில் இரட்டை சதம் விளாசினார். இதில் 19 பவுண்ட்ரிகள், 8 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்தார் கில். மேலும், மூன்று நாட்களுக்கு முன் இலங்கைக்கு எதிராக சதம் அடித்த இவர், வெறும் 19 ஒரு நாள் போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்து அடுத்த சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டியில் இதுவரை அடிக்கப்பட்ட 10 இரட்டை சதங்களில் 7 சதங்களை அடித்தவர்கள் இந்திய வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சையான அவுட்:

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளிடையேயான முதல் ஒருநாள் போட்டியை இந்தியா வென்றிருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது டேரில் மிட்செல் வீசிய 40 வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா போல்டாகியிருந்தார். ஆனால், ரீப்ளேவில் பந்து நேராக ஸ்டம்பில் படாமல் விக்கெட் கீப்பரின் கையுறையே ஸ்டம்பில் பட்டிருந்தது தெளிவாக தெரிய வந்தது. எனில், ஹர்திக் நாட் – அவுட். அப்படியிருந்தும் ஹர்த்திக்கிற்கு மூன்றாம் நடுவர் அவுட்டே வழங்கினார். இந்த முடிவு இப்போது சர்ச்சையாகியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.