மத்தியப் பிரதேச மாநிலம், ஷியோபூர் மாவட்டத்தின் குக்கிராமம் ஒன்றில் ராஜஸ்தானைச் சேர்ந்த கடத்தல் கும்பலால் மூன்று விவசாயிகள் கடத்தப்பட்டதையடுத்து, அவர்களை மீட்பதற்காக, கிராமவாசிகள் நிதி திரட்டும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து வெளியான தகவலின்படி, கடத்தப்பட்டவர்களாக அறியப்படும் ராம் ஸ்வரூப் யாதவ், பட்டு பாகேல், குடா பாகேல் ஆகிய மூன்று விவசாயிகள் நான்கு நாள்களாகக் காணவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸ் ஒருபக்கம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கும் அதே வேளையில், கிராமத்தினர் அவர்களை மீட்பதற்காக நிதி திரட்டிவருகின்றனர்.
இது குறித்துப் பேசிய ராம்ஜி பாகேல் எனும் கிராமவாசி, “எங்களிடம் நிலமோ பணமோ இல்லை. நாங்கள் என்ன செய்ய முடியும்… எங்களால் முடிந்தவரை நாங்கள் முயற்சிப்போம், ரூ.100, ரூ.200, ரூ.2,000 என எங்களால் முடிந்த தொகையை திரட்டி வருகிறோம். இதை கடத்தல் கும்பலிடம் வழங்கி, எங்கள் ஊர்காரர்களை மீட்போம்” என்று தெரிவித்தார்.

மேலும் முன்னாள் கிராம அதிகாரி சியாராம் பாகேல், “எங்கள் கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பங்களே இருக்கின்றன. அவர்களில் பெரும்பாலோர் கால்நடை வளர்ப்பவர்கள். கடத்தப்பட்ட விவசாயிகளில் ஒருவர் மிகவும் ஏழ்மையானவர். அவரின் வீட்டுக்கு சரியான கூரைகூட இல்லை. இப்படியிருக்க இந்த குடும்பங்கள் எப்படி அவர்களை மீட்க ரூ.15 லட்சம் கொடுக்கப் போகிறார்கள்… எனவே எங்களால் முடிந்தளவுக்கு முயன்று நாங்கள் பணத்தைச் சேர்ப்போம்” என்று கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தகவலறிந்து கிராமத்துக்கு வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசிய மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ராம்நிவாஸ் ராவத், “கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க, பல விவசாயிகள் தங்கள் கால்நடைகளை விற்கிறார்கள்” என்றார்.
மேலும் ஷியோபூர் எஸ்.பி அலோக் குமார் சிங், “கடத்தல்காரர்களைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10,000 பரிசு வழங்கப்படும் என்று முன்பு அறிவித்திருந்தோம். தற்போது அது ரூ.30,000 என உயர்த்தப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

போலீஸ் தரப்பிலிருந்து வெளியான தகவலின்படி, ஷியோபூர் போலீஸார் ராஜஸ்தான் போலீஸுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இருந்தாலும், கடத்தப்பட்ட விவசாயிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதற்குமுன்பும், ஷியோபூர் விவசாயி ஒருவர் கடத்தப்பட்டு, மீட்ப்புத்தொகை செலுத்திய பின்னர் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.