பழனி கும்பாபிஷேகத்தில் தமிழ் மந்திரங்களும் வேண்டும்: பெண்கள் தீ சட்டி ஏந்தி போராட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுத சுவாமி கோயிலின் கும்பாபிஷேக விழாவில் சமஸ்கிருத மந்திரங்களுடன் தமிழிலும் மந்திரங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வியாழக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தெரிவித்தது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தொடர்ந்த பொது நல வழக்கு குறித்த விசாரணையின் போது தமிழ்நாடு அரசு இதை தெரிவித்தது. முருகர் பற்றிய பல தமிழ் இலக்கியங்கள் உள்ளதாகவும், முருகரை புகழ்ந்து பல தமிழ் புலவர்கள் பாடல்களை பாடியுள்ளதாகவும், அவர் பக்தர்களால் அன்போடு தமிழ் கடவுள் முருகன் என அழைக்கப்படுவதாகவும் விசாரனையில் கூறப்பட்டது. 

இதற்கிடையில் பழனி தண்டாயுதபாணி கோவில் குடமுழுக்கில் கருவறை, வேள்விசாலை கோபுர கலசம் அனைத்திலும் தமிழில் மந்திரம் வேண்டும் என கூறி பல்வேறு அமைப்பினர், பெண்கள் கையில் தீ சட்டியை கையில் ஏந்தியவாறு பழனி பேருந்து நிலையம் முன்பு வேண்டுகோள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்குகொண்டுள்ளனர். 

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி குமாபிசேகம் நடைபெறுகிறது.16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிசேகம் நடைபெறுவதால் பக்தர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். கோவில் நிர்வாகம் இதற்கான அனைத்து பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 

இதனையொட்டி கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த கோரியும், கருவறை, வேள்விசாலை, கோபுர கலசம் வரை அனைத்திலும் தமிழில் மந்திரம்  வேண்டும் என கோரிக்கை விடுத்தும் தெய்வ தமிழ்ப் பேரவை தலைமையில், பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

மேலும் தாரை தப்பட்டைகளை இசைத்தபடியும், பெண்கள் அக்னி சட்டியை  கையில் ஏந்தியவாறும் பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தின் போது குண்டம் வைத்து தீயிட்டு வேள்வி நடத்தியும், முருகன் கவச பாடல்களை பாடியும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்து பழனி பேருந்து நிலையம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, பழனி முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிற 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தெய்வத்தமிழ் பேரவை சார்பில் முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி தெய்வத்தமிழ் பேரவை சார்பில் பழனியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.