சில்லிசிக்கனில் கவனம் ஈர்ப்பதற்காக அதிகளவில் சேர்க்கப்படும் செயற்கை வண்ணங்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக உணவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாக, சில்லிசிக்கன், காலிஃபிளவர் சில்லி, போண்டா, பஜ்ஜி கடைகளில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை தொடர்ந்து பலமுறை பயன்படுத்துவதால் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதேபோல் நுகர்வோரின் கவனம் ஈர்ப்பதற்காக, சில்லிசிக்கனில் அதிகளவில் செயற்கை வண்ணங்களை சேர்ப்பதால், புற்றுநோய் அபாயம் இருப்பதாகவும் உணவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து சேலத்தை சேர்ந்த உணவியல் நிபுணர்கள் கூறியதாவது: ‘தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக சில்லிசிக்கன், காலிஃபிளவர் சில்லி, மீன் வறுவல் கடை, போண்டா, பஜ்ஜி கடைகள் புற்றீசல் போல் பெருகி வருகிறது. இதில் பெரும்பாலான கடைகளில் சில்லிசிக்கன், காலிஃபிளவர், காளான், புடலங்காய் உள்ளிட்டவைகளில், கேசரி பவுடர் என்றழைக்கப்படும் ஜிலேபி பவுடர் அதிகளவில் சேர்க்கப்படுகிறது.
இந்த வண்ணமானது, பெரும்பாலும் நுகர்வோரின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே சேர்க்கப்படுகிறது. இதுபோன்ற கடைகளை நடத்தி வரும் 90 சதவீதம் பேர், பெரிய ஸ்வீட் ஸ்டால்கள், ஹோட்டல்களில் பயன்படுத்திய எண்ணெய்யை வாங்கி, அதில் பலகாரம் செய்கின்றனர். மேலும், அங்கு பலமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு வயிற்று வலி உள்ளிட்ட பல்வேறு நோய் ஏற்பட்டு வருகிறது.
பலமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயால் செய்யப்பட்ட பலகாரங்களை தொடர்ந்து சாப்பிடும்போது, அவை இருதய பகுதிகளில் கொழுப்பாக மாறி விடுகிறது. கூடுதல் வண்ணமும் சேர்வதால், இருதயத்தை சுற்றி கொழுப்புக் கட்டி, ரத்த ஓட்டங்களுக்கு தடை போன்றவை ஏற்படுகிறது. இது நாளடைவில் மாரடைப்பு உள்பட பல்வேறு நோய்களை ஏற்படுத்துகிறது. 2025ம் ஆண்டில் புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட நோய்களால் 60 சதவீத மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதுபோன்ற பிரச்னையில் மீள ஆய்வு நடத்துவது கட்டாயமாகும்’ என்று தெரிவித்தனர்.