மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் போதிய இடமில்லாமல் கிடைக்கும் சிறிய இடங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதனால் சரியான வழிகாட்டி பலகைள், வழிகாட்டிகளும் இல்லாமல் சிகிச்சைக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மிகுந்த சிரமம் அடைகிறார்கள்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, ஒரே இடத்தில் இல்லாமல் மூன்று இடங்களில் அமைந்துள்ளது. பழைய கட்டிடம் கோரிப்பாளையத்திலும், தலைக்காயம் மற்றும் எலும்பு முறிவு சிகிச்சைப்பிரிவு அண்ணா பஸ்நிலையம் அருகேயும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மைதானத்திலும் தனித்தனியாக உள்ளன. இந்த மூன்று இடங்களிலும் என்னென்ன சிகிச்சைப் பிரிவுகள் அமைந்துள்ளது என்பது எல்லோருக்கும் தெரியாது. அதனால், பழைய கட்டிடத்திற்கு சென்று அங்குள்ளவர்களிடம் விசாரித்தப்பிறகே மற்ற இடங்களுக்கு சிகிச்சைப்பெற வருகிறார்கள்.
மேலும், பழைய கட்டிடத்தில் பல் மருத்துவ சிகிச்சைப்பிரிவு இதய நோய் சிகிச்சைப்பிரிவு, காது மூக்கு தொண்டை சிகிச்சைப்பிரிவு, கண் மருத்துவ சிகிச்சைப்பிரிவு போன்ற பல்வேறு மருத்துவ சிகிச்சைப்பிரிவுகள் அவ்வளவு எளிதாக யாரும் கண்டறிய முடியாதநிலையில் சிறிய இடங்களிலும், லிப்ட் வசதி இல்லாத மாடிகளிலும் அமைந்துள்ளன. இந்த சிகிச்சைப்பிரிவுகளை கண்டறிந்து முழுமையான சிகிச்சைப்பெறுவது நோயாளிகளுக்கு பெரும் போராட்டமாகிவிடுகிறது.
மேலும், ஒவ்வொரு சிகிச்சைப்பிரிவுக்கும் தனித்தனியான ஆய்வகம் கிடையாது. ஒட்டுமொத்தமாக பழைய கட்டிடத்தில் ‘டீன்’ அலுவலகம் செல்லும் வழியில் மத்திய ஆய்வகம் அமைந்துள்ளது. எந்த சிகிச்சைப்பிரிவில் ரத்த மாதிரி, சிறுநீரக மாதிரி ஆய்வு எடுக்க சொன்னாலும், இந்த ஆய்வகத்தில்தான் வந்து கொடுக்க வேண்டும். அதனால், உள்நோயாளியாக சிகிச்சைப் பெறுகிறவர்கள் கூட இரண்டு பேர் குறைந்தப்பட்சம் மருத்துவமனையில் இருக்க வேண்டிய உள்ளது. ஒருவர் நோயாளியுடன் ‘அட்டன்டர்’ஆக இருந்தால் மற்றவர்கள் மருத்துவர்கள் கூறும் ஆய்வுகளை எடுத்து அதற்கான ‘ரிப்போர்ட்’ வாங்கி வர செல்ல வேண்டிய உள்ளது. சிகிச்சைப்பிரிவுகளும் ஆய்வகமும் வெவ்வறு மூலையில் இருப்பதால் அரசு மருத்துவமனை சிகிச்சைக்கு வரும் ஏழை நோயாளிகள் உறவினர்கள் உடன் வராவிட்டால் சிகிச்சைப்பெற முடியாதநிலை உள்ளது.
ஏற்கனவே ஒட்டுமொத்த மருத்துவ சிகிச்சைப்பிரிவுகளும் ஒரே வளாகத்தில் அமைய இருப்பது ஒரு வகையில் நோயாளிகளுக்கு பாதமாக இருக்கும்நிலையில் இடநெருக்கடியால் சிகிச்சைப்பிரிவுகளும் எளிதாக கண்டறியும் வகையில் வழிகாட்டி பலகை கூட இல்லாமல் உள்ளன. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வழிகாட்டுவதற்கு வழிகாட்டிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. அப்படியே நோயாளிகள், மருத்துவப் பணியாளர்களும் சிகிச்சைப்பிரிவுகளுக்கு செல்லும் வழிகளை கேட்டால் கூட அவர்களுடைய வேலைப்பழுவால் எரிந்து விழுகின்றனர். அதனால், மருத்துவமனை நிர்வாகம் ஒவ்வொரு சிகிச்சைப்பிரிவையும் நோயாளிகள் எளிதாக வழியை கண்டறிந்து செல்லும் வகையில் வழிகாட்டி பலகைகள் வைப்பதோடு முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்கு உதவி மையத்துடன் கூடிய வழிகாட்டிகள் நியமிக்க வேண்டும்.
மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தற்போது புதிய மருத்துவ சிகிச்சைப்பிரிவுகள் கட்டப்படுகிறது. அந்த கட்டிடங்கள் வந்தப்பிறகு சிகிச்சப்பிரிவுகளை நோயாளிகள் எளிதாக கண்டுபிடித்து செல்வதற்கு முறைப்படுத்தப்படும். தற்போது இடநெருக்கடியால் சிறிய கட்டிடங்களில் கூட சிகிச்சைப்பிரிவுகள் செயல்படும்நிலை உள்ளது. இது தற்காலிகமானதுதான்’’ என்றார்.