10 லட்சம் பேருக்கு கவர்மென்ட் ஜாப்… சத்தியம் செய்யாத குறையாக சொன்ன அமைச்சர்!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இந்தியா முழுவதும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் கடந்த ஆண்டு தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற்று அதன் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு இன்று பணி ஆணை வழங்கும் விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள விடுதியில் நடைபெற்றது.

அதில் இந்தியா முழுவதிலும் ரயில்வே, சுங்க வரி, வணிக வரி, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மொத்தம் 71 ஆயிரம் பேர் தேர்வாகி உள்ளனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணி ஆணை வழங்கினார்.

இந்தியா முழுவதிலும் மொத்தம் 45 இடங்களில் பணி ஆணை வழங்குவதற்கான சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மூன்று இடங்களில் பணி ஆணை வழங்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக திருச்சியில் தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பணி ஆணை வழங்கும் விழாவில் பல்வேறு துறைகளில் தேர்வாகியுள்ள 75 நபர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. அதில் 25 நபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக பணியாணை வழங்கினார். மீதமுள்ள 50 நபர்களுக்கு அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் பணி ஆணைகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 25 நபர்களுக்கு பணி ஆணையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சுங்க வரி துறையின் திருச்சி மண்டல ஆணையர் அணில் வரவேற்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மூத்த சுங்கவரித் துறை அதிகாரிகள் மற்றும் வணிக வரி துறையை சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியது:

‘ரோஜ்கர் மேளா’ என்கின்ற மத்திய அரசின் மெகா வேலைவாய்ப்பு முகாம் மூலம், 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை 71,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வேலை வாய்ப்பு என்பது மத்திய அரசு மட்டுமல்லாது, இந்தியாவில் முழுவதும் ஆட்சி புரியும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளுகின்ற மாநிலங்களிலும், மாநில அளவிலான வேலைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

நாங்கள் போகும் போக்கில் வாக்குறுதிகளை சொல்லிவிட்டு, பின்னர் அந்த வார்த்தைகளில் பின்வாங்குபவர்கள் இல்லை. நாங்கள் சொல்லியது சொல்லியபடி, குறிப்பிட்ட நாட்களுக்குள் 10 லட்சம் பேருக்கு நிச்சயம் வேலை வாய்ப்புகளை வழங்குவோம்

75 ஆண்டுகள் முடிந்து சுதந்திர தினவிழா கொண்டாடுகின்ற இந்த வேளையில், தற்போது பணியில் சேர்ப்பவர்கள், இன்னும் 25 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். வருங்கால இந்தியாவை வலிமையாக வழி நடத்துபவர்களாக இருப்பார்கள் என்று அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.