குடியரசு தின கொடியேற்றுதலில் சாதிய பாகுபாடு இருக்கக் கூடாது – ஆட்சியர்கள் கண்காணிக்க தலைமைச் செயலர் அறிவுறுத்தல்

சென்னை: குடியரசு தினத்தன்று, சாதிய பாகுபாடு ஏதுமின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களைக் கொண்டு தேசியக் கொடி ஏற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஒருசில கிராம ஊராட்சிகளில் சாதியப் பாகுபாடுகள் காரணமாக மக்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நான் எழுதிய கடிதத்தில், 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் எவ்வித சாதியப் பாகுபாடும் இன்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களைக் கொண்டு, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் தலைமை அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவதை உறுதி செய்யவும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில், எவ்வித சாதியப் பாகுபாடும் இன்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள், பிரதிநிதிகள், பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்வதை உறுதி செய்வதுடன், இதுகுறித்த அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைக்கவும் கூறியிருந்தேன்.

அதில் நடவடிக்கை எடுக்கவேண்டிய பொருள் தொடர்பாக பட்டியலினத் தலைவர்கள் கொடியேற்றுவதில் ஏற்படும் பிரச்சினைக்குரிய 15 இனங்கள் கண்டறியப்பட்டு அவற்றைக் களையும்படியும் தெரிவித்திருந்தேன்.

அதைத்தொடர்ந்து, நடைபெற்று முடிந்த 75-வது சுதந்திர தின பெருவிழாவில் பிரச்சினைக்குரிய 15 இனங்கள் தொடர்பாக, அவரவர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கைகள் பெறப்பட்டு அரசால் ஆய்வும் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மாதந்தோறும் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி 15 இனங்கள் தொடர்பாக தொடர் நடவடிக்கை எடுத்து, எவ்வித பிரச்சினைகளும் இனி வருங்காலங்களில் ஏற்படாதவாறு உரிய கிராம ஊராட்சி தலைவர்களுக்கு தக்க ஆலோசனைகளை அல்லது பயிற்சிகளை அளித்து எவ்வித புகார்களும் இல்லாமல் எதிர்வரும் ஜன.26-ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் குடியரசு தின விழா இணக்கமாக நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.

மேலும், குடியரசு தினத்தை முன்னிட்டு, நடைபெறும் கிராமசபைக் கூட்டத்திலும் எவ்வித சாதியப் பாகுபாடும் இன்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களை கண்ணியத்துடன் நடத்தும் விதமாக எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்த அறிக்கையை உரிய ஆதார நகல்கள், புகைப்படங்களுடன் அரசுக்கு உடனுக்குடன் அனுப்ப வேண்டும். அதேபோல், குடியரசு தினத்தில், கிராம சபை முடிந்ததும் எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல் நடைபெற்றதா என்பதை உறுதிசெய்து விரிவான அறிக்கை அனுப்பவேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.