வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புனே: மஹாராஷ்டிர மாநிலம் புனேயில், மந்திரவாதியின் பேச்சை கேட்டு , குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக ஒரு பெண்ணை மனிதனின் எலும்புத்தூளை சாப்பிட கட்டாயப்படுத்திய கணவன், மாமியார் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த பெண் ஒருவர், போலீசில் பல புகார்களை அளித்தார். அதில், முதலில் திருமணத்திற்கு பிறகு, கணவன், மாமியார் உள்ளிட்டவர்கள் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கூறியிருந்தார்.
மற்ற புகார் ஒன்றில், திருமணத்திற்கு பிறகு எனக்கு குழந்தை பிறக்கவில்லை. அதனால், பல்வேறு சாமியார்களை சந்தித்து அதன்படி நடக்க வேண்டும் என மாமியார் கட்டாயப்படுத்தினார். அதற்கு கணவரும் உடந்தையாக இருந்தார். பிறகு, சமீபத்தில் கொங்கன் பகுதியில் , தெரியாத இடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு இருந்த அருவியின் கீழ் ‘ அகோரி’ பயிற்சியில் ஈடுபட கட்டாயப்படுத்தி சில மந்திரங்களை கூற சொன்னார்கள். அப்போது, குடும்பத்தினர் வீடியோ கால் மூலம் மந்திரவாதி ஒருவருடன் தொடர்பில் இருந்து ஆலோசனைகளை பெற்றனர்.
பல மாதங்களாக, அமாவாசை அன்று வீட்டில், சில மூட நம்பிக்கை செயல்களை கட்டாயப்படுத்தியதுடன், சுடுகாட்டிற்கு கட்டாயமாக அழைத்து சென்று, இறந்த மனிதனின் எலும்புத்தூளை சாப்பிடும்படி நிர்பந்தித்தனர் என பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறினார்.

இதனையடுத்து, கணவன், மாமியார் உள்ளிட்ட 7 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், குடும்பத்தினர் நன்கு படித்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து சென்ற இடங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ள போலீசார், குடும்பத்தினரை விரைவில் கைது செய்வோம் என உறுதி அளித்துள்ளதுடன், துணை கமிஷனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படுவார் என உறுதி அளித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement