வாய் சுகாதாரம் குறித்து அறிவியல்ரீதியான தெளிவை ஏற்படுத்தி, பொதுவாக எழும் கேள்விகளுக்கு விடை காண்பதே இத்தொடரின் நோக்கம். பல் மருத்துவத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற, தனியார் பல் மருத்துவக்கல்லூரி இணைப் பேராசிரியரான பா.நிவேதிதா, இத்தொடரின் முதல் இரண்டு அத்தியாயங்களில், பல் சொத்தை, அதன் வகைகள், சிகிச்சை முறைகளை விவரித்தார். இந்த அத்தியாயத்தில் வாய்ப்புற்று நோய், அதற்கான காரணங்களை விவரிக்கிறார்…

இந்தியாவை ‘வாய்ப் புற்றுநோயின் தலைநகரம்’ என்று அறிவிக்கும் நிலைமை கூட வரலாம். இது மிகவும் அபாயகரமான, ஆனால் நிதர்சனமான உண்மை. உலகில் மூன்றில் ஒருபங்கு வாய்ப் புற்றுநோய் பாதிப்பு இந்தியாவில்தான் காணப்படுகிறது. இந்தியாவில் வாய்ப் புற்றுநோய்க்குதான் முதலிடம், நுரையீரல், கல்லீரல் புற்றுநோய்களுக்கு அல்ல.
இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் , இந்தியாவில் 60% – 80 % மக்கள் நோய் முற்றிய பிறகே மருத்துவரிடம் வருகிறார்கள். இப்படி நோயளிகளாக வரும் மக்கள் உயிர் பிழைக்கும் விகிதம் வெறும் 27% தான். வாய்ப் புற்றுநோய் உண்மையில் குறைத்து மதிப்பிடப்படுகிறது என்றே கூறவேண்டும்.

இத்தனைக்கும் வாய்ப் புற்றுநோய்க்கான காரணிகளான புகையிலை, வெற்றிலை, கொட்டைப்பாக்கு, சுண்ணாம்பு இவை அனைத்தும் மாற்றக்கூடிய ஆபத்து காரணிகள் (modifiable risk factors) . இந்தப் பழக்கங்களை கைவிட்டால், வாய்ப் புற்றுநோயிலிருந்து தப்பிக்கலாம்.
80% வாய்ப் புற்றுநோய்க்கு காரணம் புகையிலை தான். புகையிலை என்பது இரண்டு விதங்களில் கிடைக்கிறது. முதலில் smokeless tobacco. உதாரணம் பான்மசாலா, குட்கா, வெற்றிலைப் பாக்கு, புகையிலை போன்றவை. அடுத்து smoking tobacco… அதாவது சிகரெட், பீடி போன்ற புகைக்கக்கூடியவை. இந்தப் பழக்கங்கள் இருந்தால் நிச்சயமாக வாய்ப் புற்றுநோய் வரும்.

அடுத்த காரணி ஆல்கஹால். மது + புகையிலை என்பது பயங்கரமான கலவை. 35% வாய்ப் புற்றுநோய்க்கான காரணியாக இந்தக் கலவை இருக்கிறது. அடுத்து கொட்டைப்பாக்கு. இது மட்டுமேகூட புற்றுநோயை (carcinogen) உண்டாக்கக்கூடியதுதான். வெற்றிலை, சுண்ணாம்பு மற்றும் கொட்டைப்பாக்கு – இது மற்றுமொரு மோசமான கலவை. 50 % வாய்ப் புற்றுநோய்க்கான காரணியாக இந்த combo விளங்குகிறது. இந்தக் கலவை தாம்பூலத்திற்கு உகந்ததாக இருக்கலாம். அதே நேரம், வாயில்போட்டு மென்று கொண்டே இதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
இது தவிர வைரஸ் நுண்கிருமியாலும் வாய்ப் புற்றுநோய் வரலாம். எனினும், அது பெரும்பாலும் நமது கட்டுப்பாட்டில் இல்லை. காரணிகளைப் பார்த்தாயிற்று. இப்போது நம் வாயில் எந்தெந்தப் பகுதியை புற்றுநோய் பாதிக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். இத்தொடரை தொடங்கும்போது, நம் வாயில் பற்களைத் தவிர, கன்னத்தின் உள்பகுதி (buccal mucosa), நாக்கு, அண்ணம், நாக்கின் கீழ்ப்பகுதி (floor of the mouth), உதடு மற்றும் ஈறு என்ற பகுதிகள் இருக்கின்றன என்று நான் குறிப்பிடது நினைவிருக்கும். எனவே, இதில் பற்களைத் தவிர எல்லா பகுதிகளிலும் வாய்ப் புற்றுநோய் வரலாம். இந்தப் பகுதிகளிலெல்லாம் Pre-Cancerous lesions-ம் வரலாம். Cancer என்றால் புற்றுநோய். அது என்ன Pre-cancerous lesions? இது புற்றுநோய்க்கு முந்தைய நிலை. இதுவும் பற்களைத் தவிர, வாயின் மற்ற அனைத்துப் பகுதிகளிலும் வரலாம். இந்த நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால் கட்டாயம் அது புற்றுநோயாக மாறாமல் தடுத்துவிட முடியும்.

இதுவரை புற்றுநோய்க்கு முந்தைய நிலையைப் பார்த்தோம். இப்போது புற்றுநோய் குறித்து பார்ப்போம். இதுவும் வாயின் அனைத்துப் பகுதிகளிலும் வரலாம். ஆனால் நாக்கு மற்றும் அதன் கீழ்ப் பகுதி ( floor of the mouth) – இந்த இரண்டிலும், இரண்டு வாரங்களுக்கு மேல் ஆறாமல் ஏதாவது புண் இருந்தால், அது சந்தேகத்திற்குரியதாகவே பார்க்கப்பட வேண்டும். உடனே மருத்துவரை அணுகியே ஆகவேண்டும். இந்தப் பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய், வேகமாக உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவும் தன்மை உடையது.
நாக்கில் ஏற்படும் புற்றுநோய் பெரும்பாலும் கூர்மையான பற்கள் மற்றும் செயற்கைப் பற்களில் உள்ள கம்பிகள் தொடர்ந்து உரசிக் கொண்டே இருப்பதால், சிறு புண்ணாகத்தான் ஆரம்பிக்கும். அப்போதே கவனித்து விட்டால் சிறிய புண்ணோடு தப்பித்து விடலாம். இல்லாவிட்டால், நாம் நமது கவனக்குறைவுக்கு பெரிய விலையைக் கொடுக்க நேரிடும். இதை அவசியம் மனதில் கொள்ளுங்கள்.
இப்படியாக புற்றுநோய் என்று கண்டறிந்த பின்பு மாத்திரைகள், கதிர்வீச்சு மற்றும் அறுவை சிகிச்சை போன்றவற்றின் மூலம் நம் நோயின் தன்மைக்கேற்ப மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பர். ஆனால் சிகிச்சையானது நோயைவிட மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இத்தொடரின் நோக்கம் சிகிச்சையை பற்றி பேசுவதல்ல…. நோய் நாடி நோய் முதல் நாடி.. வருமுன் காப்போம்… இதுதான் எனது நோக்கம்.

இந்த வாரத்தின் TAKE HOME மெசேஜ்…
புகையிலை வேண்டாம். கொட்டைப்பாக்கு வேண்டாம். உங்களுக்கு இந்தப் பழக்கங்கள் இருந்தால், உடனே நிறுத்தி விடுங்கள், ஒருவேளை நிறுத்த முடியவில்லை என்றால் ஆறு மாதத்திற்கொரு மருத்துவரை அணுகி பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். புற்றுநோய்க்கு முந்தைய நிலையா, புற்றுநோயா என்றெல்லாம் குழப்பிக்கொள்ளாதீர்கள். மருத்துவரிடம் விட்டுவிடுங்கள்.
உங்களின் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். ஏனென்றால் self love is the best love!