ஜம்முவில் இரட்டை குண்டுவெடிப்பு; ராகுல் காந்திக்கு விடப்பட்ட எச்சரிக்கையா.?

கன்னியாகுமரியிலிருந்து கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி, ராகுல் காந்தி நடை பயணத்தை துவங்கினார். இதையடுத்து, கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா, தற்போது ஜம்மு – காஷ்மீரில் நுழைந்துள்ளது.

அங்கு லகான்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜம்மு – காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா, ராகுல் காந்தியை வரவேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாதம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தை நிகழ்த்துவதன் மூலம் மட்டுமே இதற்கு தீர்வு காண வேண்டும்.

ஆனால் பலமுறை இந்திய எல்லைக்குள் நுழைத்து வாலட்டும் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கும் மத்திய பாஜக அரசு, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு சங்கராச்சாரியார் பாதயாத்திரை மேற்கொண்டார். சாலைகளே இல்லாத அந்த காலத்தில் காடுகளின் வழியாக அவர் நடைபயணம் மேற்கொண்டார்.

அவருக்கு அடுத்து ராகுல் காந்தி தற்போது கன்ணியாகுமரியில் இருந்து ஜம்மு -காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். வெறுப்புணர்வுக்கு எதிராக நாட்டை ஒருங்கிணைப்பதே இந்த யாத்திரையின் நோக்கம். ராமர் மற்றும் காந்தியின் தேசமான இங்கு அனைவரும் சமம்’’ என கூறினார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பரம் வீர் சக்ரா விருது பெற்ற முன்னாள் ராணுவ தளபதி பனா சிங் பங்கேற்றார்.

இது குறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘‘இந்தியாவையும் அதன் இலட்சியங்களையும் பாதுகாப்பது பற்றி நாம் பேசும் போதெல்லாம், பனா சிங் போன்ற நாட்டின் துணிச்சலான மகன்களின் பெயர்கள் எடுக்கப்படுகின்றன. சியாச்சின் பனி படர்ந்த உயரத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றிய பரம் வீர் சக்ரா வெற்றியாளரான கேப்டன் பனா சிங், எனக்கும் ஒவ்வொரு தேசபக்தருக்கும் உத்வேகம் அளித்தவர்’’ என அவர் கூறினார்.

இந்தநிலையில் ஜம்முவில் இன்று நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்புகள், ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் பாதுகாப்பு கவலைகளை எழுப்பியுள்ளது. பாத யாத்திரையை முன்னிட்டு யூனியன் பிரதேசம் பலத்த பாதுகாப்பு போர்வையில் இருந்த நேரத்தில். ஜம்முவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு காரணமாக, ஜம்முவில் இருந்து 60 கிமீ தொலைவில் உள்ள சத்வால் என்ற இடத்தில் காந்தியின் யாத்திரை தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்புகளின் தன்மை இன்னும் கண்டறியப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இரட்டை குண்டுவெடிப்புகளில் 6 பேர் காயமடைந்ததாக கூடுதல் காவல்துறை இயக்குநர் (ஜம்மு) முகேஷ் சிங் உறுதிப்படுத்தினார். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், அவர்களில் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேடுதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி அறிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.