தேசபக்தி: போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள் – ரவிக்குமார் எம்.பி.!

தேசியகீதத்தை அவமதித்துவிட்டார் என திருமதி மம்தா பானர்ஜியின்மீது புகார் அளித்த பாஜகவினர், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேசியகீதம் பாடுவதற்குமுன்பே அவையை விட்டு வெளியேறியதன்மூலம் தமிழ்நாடு ஆளுநர் தேசியகீதத்தை அவமதித்துவிட்டார் எனக் கூறப்பட்டபோது ஏன் மௌனம் காத்தார்கள்? என விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தேசபக்தி என்றால் என்ன என்பது இன்று பாஜக உள்ளிட்ட சங்கப் பரிவாரங்களால் வரையறுக்கப்படுகிறது. நாடு முழுவதிலும் உள்ள மக்கள் ஒரே மாதிரியாக தேசபக்தியை வெளிப்படுத்த வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மும்பை சென்றிருந்தபோது தேசிய கீதத்தை அவமதித்ததாகக் கூறி அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மகாராஷ்டிராவில் உள்ள பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஒருவரின் புகாரின் அடிப்படையில் மாஜிஸ்திரேட் கோர்ட் ஒன்று இந்த வழக்கைப் பதிவுசெய்தது. ஆனால் செஷன்ஸ் கோர்ட்டோ இதில் விதிகள் சரியாகக் கடைபிடிக்கப்படவில்லை.

எனவே வழக்கு பதிந்ததை மறுபரிசீலனை செய்யும்படி வழக்கை மீண்டும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. தேசிய கீதம் பாடப்படும்போது எழுந்து நிற்காமல் இருப்பது அல்லது பாடாமல் இருப்பது அவமரியாதையாகப் பார்க்கப்படலாம் ஆனால் இவை குற்றங்கள் அல்ல என்று செஷன்ஸ் நீதிமன்றம் கூறியது. தேசிய சின்னங்களை அவமதிப்பதைத் தடுக்கும் 1971 ஆம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 3, தேசிய கீதம் பாடப்படுவதைத் தடுப்பது மற்றும் பாடுவதற்கு இடையூறு விளைவிப்பது மட்டுமே தண்டனைக்குரியது என்று தெளிவாகக் கூறுகிறது.

மம்தா பானர்ஜியின் செயல்கள் இவை இரண்டிலும் பொருந்தவில்லை. அதற்கு முன், தேசிய கீதம் பாடாததால் தேசிய சின்னத்தை அவமதித்துவிட்டார் என ஜம்மு காஷ்மீரில் ஒரு ஆசிரியர் மீது வழக்கு தொடுத்தார்கள். அதை விசாரித்த ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றமும் இதே போலத்தான் தீர்ப்பளித்திருந்தது.

தேசபக்தி என்பதை எதிர்க்கட்சியினர் மீதும் சிறுபான்மையினர் மீதும் தாக்குதல் தொடுப்பதற்கான ஆயுதமாக பாஜகவினர் பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்களுக்கு உண்மையிலேயே தேசபக்தி இருக்கிறதா ? நமது நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை சீன ராணுவம் ஆக்கிரமித்திருப்பதாகவும், எல்லைப் பகுதியில் பல்வேறு ராணுவக் கட்டமைப்புகளை சீனா உருவாக்கியுள்ளது எனவும் சாட்டிலைட் படங்களை ஆதாரமாகக்கொண்டு அமெரிக்க உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

அதை ஆதாரமாகக் காட்டி காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினால் அதைப் பூசி மழுப்புகிறது பாஜக அரசு. சீனாவின் செயலிகளைத் தடை செய்துவிட்டோம் எனக் கூறி போலி தேசபக்திக்குத் தீனிபோட்டது பாஜக அரசு, ஆனால் இன்று மிக அதிக அளவில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்து அந்த நாட்டுக்கு லாபம் சேர்த்துக்கொண்டிருக்கிறது. 2022 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் இந்தியாவின் முக்கிய இறக்குமதி ஆதாரமாக சீனா இருந்தது. சீனாவிலிருந்து செய்யப்பட்ட இறக்குமதியின் அளவு கடந்த ஆண்டைவிட 11.9 சதவீதம் அதிகரித்து 75.87 பில்லியன் டாலராக இருந்தது எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தேசியகீதத்தை அவமதித்துவிட்டார் என திருமதி மம்தா பானர்ஜியின்மீது புகார் அளித்த பாஜகவினர், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேசியகீதம் பாடுவதற்குமுன்பே அவையை விட்டு வெளியேறியதன்மூலம் தமிழ்நாடு ஆளுநர் தேசியகீதத்தை அவமதித்துவிட்டார் எனக் கூறப்பட்டபோது ஏன் மௌனம் காத்தார்கள்?

இந்த இரண்டு உதாரணங்களும் பாஜக உள்ளிட்ட சங்கப் பரிவாரங்களின் தேசபக்தி போலி என்பதற்கு உதாரணங்கள். இந்த போலிகளைக் கண்டு தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.